இந்த வலைப்பதிவில் தேடு

திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம்: ஆன்லைன் டிக்கெட்டுகள்

திங்கள், 9 டிசம்பர், 2019



திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஆன்லைன் மூலம் கட்டண தரிசனச் சீட்டுகள் விற்பனை செய்யப்படும் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. அண்ணாமலையார் கோயிலில் வரும் 10-ம் தேதி அதிகாலை 4 மணிக்க பரணி தீபமும், 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். மேலும், தங்க கொடி மரம் முன்பு மாலை 6 மணிஅளவில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சிக் கொடுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதையொட்டி பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் கட்டண சீட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. பரணி தீப தரிசனத்துக்கு 500 எண்ணிக்கையில் ரூ.500-க்கான கட்டண சீட்டுகள் விற்பனை செய்யப்படும். இதேபோல், மகா தீபத் தரிசனத்துக்கு 100 எண்ணிக்கையில் ரூ.600-க்கான கட்டண சீட்டுகளும், 1000 எண்ணிக்கையில் ரூ.500-க்கான கட்டணச் சீட்டுகள் விற்பனை செய்யப்படும்.

டிசம்பர் 7-ம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச் சீட்டு பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வழியாகவே கட்டணச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பரணி தீபத் தரிசனத்துக்கு வரும் 10-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரையும், மகா தீபத் தரிசனத்துக்கு வரும் 10-ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே கட்டண பதிவு சீட்டு பெற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டணச் சீட்டு மற்றும் அசல் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்தில், அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வந்து சேர வேண்டும். அந்த கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். நேரம் கடந்து வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நெய் காணிக்கை

மகா தீபத்துக்கு பக்தர்களிடம் இருந்து நெய் காணிக்கை பெறப்படுகிறது. ராஜகோபுரம் அருகே உள்ள திட்டி வாசல் அருகேயும், திருமஞ்சன கோபுர நுழைவு வாயில் மற்றும் பே கோபுரம் அருகே மலையேறும் பாதையின் முகப்பு பகுதியில் நெய் காணிக்கை பெறப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent