இந்த வலைப்பதிவில் தேடு

நாளை நெருப்பு வளைய சூரிய கிரகணம் - வானில் அறிய நிழல் விளையாட்டு - முழு விவரம்

புதன், 25 டிசம்பர், 2019



சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல் விளையாட்டுதான் கிரகணங்கள். சூரிய, சந்திர கிரகணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.


ஆனால், டிசம்பர் 26 அன்று நிகழ இருப்பது வளைய சூரிய கிரகணம். (Annular Eclipse) இதுபோல் இன்னொரு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டும் என்றால் இன்னும் 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால், இந்த கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த அரிய நிழல் விளையாட்டைக் கண்டுகளிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.



கிரகணம் என்றால் என்ன?

சூரியனைப் பூமி சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றி வரும்போது சில நேரத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்போது சூரியனின் ஒளித்தட்டைச் நிலவு மறைத்துவிடுகிறது. இதனைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம்.


சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். சூரியனின் மையப் பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் வளையம்போல் ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம். பூமி, சூரியன், நிலவு மூன்றும் பெளர்ணமி அன்று ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவில் விழுகிறது. அது சந்திர கிரகணம். (அமாவாசையின்போது சந்திரனின் நிழல் பூமியில் விழுந்தால் சூரிய கிரகணம், பெளர்ணமியின்போது பூமியின் நிழல் சந்திரனில் விழுந்தால் சந்திர கிரகணம்.)



சூரியனை எப்படிச் நிலவு மறைக்கும்?

நிலவின் விட்டத்தைப்போல் சூரியனின் விட்டம் 400 மடங்கு பெரியது. தொலைவு காரணமாக நம் கண்களுக்கு சூரியனும் நிலவும் கிட்டத்தட்ட ஒரே அளவுபோல் காட்சியளிக்கின்றன. ஒரு கண்ணை மூடிக்கொண்டு, இன்னொரு கண் முன்னே ஒரு விரலை வைத்தால் தூரத்தில் தெரியும் மனிதன், பேருந்து, மலை எதுவானாலும் மறைந்துவிடுகிறது அல்லவா? அதேபோல்தான் பூமியைவிட்டுத் தொலைவில் இருக்கும் சூரியனை, பூமிக்கு அருகில் இருக்கும் நிலவு மறைத்துவிடுகிறது. இதனால்தான் கிரகணம் ஏற்படுகிறது.


சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சுமார் 28 நாட்களுக்கு ஒரு முறை நிலவு வந்துகொண்டுதான் இருக்கிறது. பிறகு ஏன் 28 நாட்களுக்கு ஒருமுறை சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை? திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, உங்கள் முன்னால் ஒருவர் கடந்து சென்றால், அப்போது திரைப்படம் தெரியாது அல்லவா? அந்த மனிதர் உங்களுக்கு மறைக்கக் கூடாது என்று நினைத்து குனிந்து சென்றால், திரைப்படம் தெரியும்தானே! அதேபோல்தான் சில நேரத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது சூரியனை மறைத்துவிடுகிறது.

பெரும்பாலான நேரத்தில் இப்படி வரும்போது நிலவு நேர்க்கோட்டில் வராமல் சற்றுத் தாழ்வாகவோ மேலாகவோ வந்துவிடுகிறது. இதனால்தான் 28 நாட்களுக்கு ஒருமுறை சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை.



வளைய சூரிய கிரகணம்

இந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று நிகழ இருப்பது முழு சூரிய கிரகணம் அல்ல. வளைய சூரிய கிரகணம். சூரியனின் ஒளித்தட்டை நிலவு முழுமையாக மறைக்காமல் சற்று தாழ்வாக மையத்தில் மறைப்பதால், சூரிய ஒளி வளையம்போல் (ring of fire) காட்சியளிக்கும். இதுதான் வளைய சூரிய கிரகணம்.


சூரிய கிரகணம் ஏற்படும்போது வழக்கமான நாட்களைப் போலவே சாப்பிடலாம், வெளியே வரலாம், இயல்பாக இருக்கலாம். வானில் ஏற்படும் இந்த அரிய நிகழ்வை எல்லோரும் கண்டுகளிக்கலாம். சூரிய கிரகணத்தின்போது தீங்கான எந்தக் கதிர்களும் வெளிவருவதில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்பதால், சூரியக் கண்ணாடிகளை வாங்கி, அதன் மூலம் சூரிய கிரகணத்தை தயக்கம் இன்றி பார்த்து மகிழலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த கிரகணத்தை ரசிக்கலாம்.

எங்கெல்லாம் தெரியும்?

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு மாவட்டங்களில் வளைய சூரிய கிரகணம் முழுமையாகத் தெரியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும். 26-ந் தேதி காலை 8.06 மணிக்குத் தொடங்கும் சூரிய கிரகணம் காலை 11.14 மணிக்கு முடிகிறது. 9.31 முதல் 9.34 வரை வளைய சூரிய கிரகணம் 3 நிமிடங்கள் நீடிக்கிறது. இதுதான் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது!



எப்படிப் பார்க்கலாம்?

சூரியக் கண்ணாடிகள் மூலம் இந்தச் சூரிய கிரகணத்தைத் தயக்கமின்றி கண்டுகளிக்கலாம். 10 ரூபாய் விலையில் பரவலாக சூரியக் கண்ணாடிகள் கிடைக்கின்றன. கண்ணாடியைப் பெற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தையும் தொடர்புகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent