இந்த வலைப்பதிவில் தேடு

ரொம்ப படுத்தி எடுக்காதீர்கள் மரியாதைக்குரிய கல்வித் துறை அதிகாரிகளே

வெள்ளி, 20 டிசம்பர், 2019

பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ...

 ரொம்ப படுத்தி எடுக்காதீர்கள் மரியாதைக்குரிய கல்வித் துறை அதிகாரிகளே .....


தேர்வு விடைத்தாட்கள் திருத்துவது என்பதை எப்போதும் மிக ஜாக்ரதையாகத்தான் ஆசிரியர்கள் செய்வது வழக்கம். இரு நாட்களாக ஊடகங்கள் இப்படியான செய்தி வெளியிடுவது மிக வருத்தமாக உள்ளது. 

"எள் " என்பதற்குள்ளாக "எண்ணையாக " மாறி பணியாற்றும் நேர்மையான மனிதர்கள் தான் 95% ஆசிரியர் தொழிலில்  இருப்பார்கள். மீதி 5% என்பவர்கள் (ஒரு வேளை) தாமதமாக ஆனால்  செய்து முடித்து விடுவார்கள் .எங்கு பார்த்தாலும் EMIS , TNTP , சிலபஸ் , Exam Duty , CCE பதிவேடு , Online attendance என தொடர்ந்து சுழன்று சுழன்று பணியாற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர். 


துறையின் பாதுகாப்பில் எந்தப் பள்ளிப் பணிகளும் செய்யாமல் கல்லூரிச் சாலை DPI  வளாகத்தில் ,  ஆசிரியர் பணியின் ஊதியத்தைப்  பெற்றுக் கொண்டு, ஆனால் பள்ளிக்கும் செல்லாமல் ,  AC அறையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டு , அங்குள்ள கிளர்க்குகளின் வேலைகளைக் கைப்பற்றி வாழும் ஆசிரியர்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக எந்த ஊடகத்திலும் வருவதில்லை .


அதே போல மாநில அலுவலகத்தில் மட்டுமன்றி  மாவட்டக் கல்வி அலுவலர்களின்  அலுவலகத்தில் தங்களை ஒளித்துக் கொண்டு பணியாற்றிடாமல் சம்பளம் பெறும் ஆசிரியர்களின் மீதும்  எந்த நடவடிக்கையும் இல்லை. 

ஆனால் உண்மைக்கு பயந்து செய்யும் தொழிலே தெய்வம் என மனதில் எண்ணி பணியாற்றும் பள்ளிக்குள் ஒழுங்காக பணி செய்யும் அத்தனை பேருக்கும் அவசர கால நடவடிக்கை உத்தரவு பிறப்பிப்பதில் நீங்கள் இவ்வளவு நேர்மையாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி .

அதே போல .... லட்சக்கணக்கணக்கான விடைத்தாட்களைத் திருத்தும் பொதுத்  தேர்வு மையங்கள் முதற்கொண்டு மேற்பார்வையாளர்கள் அடுத்தடுத்த உயர் அலுவலர்கள் என மிகச் சரியாகவே விடைத் தாட்கள் திருத்தும் பணி நடக்கின்றது. 

இப்போது 5 , 8 வகுப்புகளுக்குப்  பொதுத் தேர்வுக்கான ஆணை வந்துள்ளதைத் தொடர்ந்து  , அதற்கும் ஆசிரியர்கள் குழந்தைகளைத் தயார் செய்து கொண்டு தான்  இருக்கின்றனர். எந்தக் குழந்தையையும் தேர்ச்சி பெறாமலிருக்க வேண்டும் என ஆசிரியர்கள் எண்ணவே மாட்டார்கள் , கவனமாகத் தான் விடைத்தாட்களைத் திருத்துவார்கள். 


ஆனால் எடுத்ததெற்கெல்லாம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கைப் பாய்ச்சல் என்ற ஊடக செய்திகளைத் தவிர்க்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எந்த குறிப்பிட்ட  பணியையும் துறை வழியாகவே செய்யலாம் . விடைத்தாட்கள் திருத்தும் பணியினை  Random    ஆக   சரிபார்க்கலாம். தவறு ஏற்படின் உயர் அதிகாரிகள் தலையிட்டு துறைக்குள் கண்டித்து அதை சரி செய்யலாம் .

எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்து , வேலைகளே நடைபெறாமல் இருக்கும் சூழல் ... கல்வித் துறையின் மேல் மட்ட அளவிலும் ஊழல் கொட்டிக் கிடக்கிறது. அவர்களெல்லாம் எந்த நடவடிக்கைக்கும் உட்படுவதில்லை. 

 ஆனால் குழந்தைகளுடன் பணியாற்றும் ஆசிரியர்களே திரும்பத் திரும்ப பயமுறுத்தலுக்கும்  அச்சுறுத்தலுக்கும்  பல விதங்களில் ஆளாகின்றனர். 

பொது மக்கள் பார்வையில் இது போன்ற செய்திகள் பார்த்த உடனேயே , வாத்தியார்கள் இதைக் கூட சரியாக செய்வதில்லையோ என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர். 

இவை மாற வேண்டும். தேவையான மாற்றங்களை , மாணவர் நலன் சார்ந்து பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள மேற்சொன்னவற்றை கவனத்தில் கொள்ள பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 


தற்போது கல்வித் துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் சிஜி தாமஸ் வைத்யன்  அவர்களது கவனத்திற்கு இவற்றை  எடுத்துச் செல்ல வேண்டும் . ஆக்கப் பூர்வமான முயற்சிகளும் நடவடிக்கைகளுமே பள்ளிக் கல்வித் துறையை சீர்படுத்துமேயொழிய இப்படியான பயமுறுத்தல்களைத் தவிர்க்க வேண்டும் என பணிவுடன் ஆசிரியர்கள் சார்பாக துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். 

உமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent