இந்த வலைப்பதிவில் தேடு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு... தேர்வு ரத்தாக வாய்ப்பு..?

புதன், 29 ஜனவரி, 2020



டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதனால் குரூப் 4 தேர்வு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது


டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து 5ம் நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள், தேர்வர்கள் என இதுவரை 12 பேர் கைது செய்யப்பட நிலையில், இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ் உட்பட மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

தேர்வு நடைமுறை, தேர்வு பற்றி சில சந்தேகங்களை சிபிசிஐடி போலீசார் எழுப்பியிருந்த நிலையில், அது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் கூடுதல் ஆவணங்களை அளித்து விளக்கம் அளித்தனர்.



இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கைதான அரசு ஊழியர் திருக்குமரன் , சர்ச்சைக்குரிய ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் குரூப் 2ஏ தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.

குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு புகார் எழுந்திருப்பதால், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை நிலை தெரியும் என்றும் வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் முறையீடு செய்தார். அப்போது, மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனால், வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்தியபிரதேச மாநிலத்தின் வியாபாம் ஊழலை போல, தமிழ்நாட்டின் வியாபம் என சொல்லும் அளவுக்கு டி.என்.பி.எஸ்.சி மோசடி இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தேர்வு முறைகேடு தொடர்பாக ஒருசிலர் கைது செய்யப்பட்டாலும், முக்கிய குற்றவாளியை தப்ப வைக்கவே இதுபோன்ற காட்சிகள் அரங்கேறுதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார். 


சில நிமிடங்களில் அழியும் மை, விடைத்தாள் கொண்டு செல்லும் வழியில் திருத்தம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஜீபூம்பா கதையை போல இருப்பதாக கூறியுள்ள ஸ்டாலின், உயர்மட்டம் வரை ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மோசடி நடைபெற வாய்ப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.Gfx Outதேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். 

அடுத்தடுத்து தொடரும் கைது மற்றும் சிபிஐ விசாரணைக் கோரி நீதிமன்றம் வரை சென்றுவிட்டதால், குரூப் 4 தேர்வே ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent