தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் ஆய்வு நடத்த அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திடீரென முன்னறிவிப்பின்றி, ஒரு வட்டாரக் கல்வி அலுவலர் மாதத்துக்கு குறைந்தது 20 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைப் பார்வையிடவும், 5 பள்ளிகளை ஆய்வு செய்யவும் தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மாநில அளவில் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், ஆசிரியர்களின் வருகை, பாடங்களை நடத்தும் தன்மை, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களின் எண்ணிக்கை, கட்டிடங்களின் தன்மை, உள்கட்டமைப்பு வசதிகள் பற்றி திடீர் ஆய்வு மேற்கொள்வதன் மூலம் நேரடியாக கள நிலவரத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால் திடீர் ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திடீர் ஆய்வு மேற்கொள்வது பற்றி அனைத்து வகை கல்வி அலுவலர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கவும் தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி முடிவு எடுத்துள்ளார். முதற்கட்டமாக வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை கல்வி அலுவலர்களுக்கு நாளை வேலூர் சத்துவாச்சேரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், கூட்டத்தில் அனைத்து வகை கல்வி அலுவலர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக