இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் கொடுக்கும் பொங்கல் பரிசு..!

வியாழன், 9 ஜனவரி, 2020



காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஏழ்மையைக் காரணம் காட்டி, ஏழை மாணவர்கள் கல்வி எட்டாக் கனியாக இருந்து வந்துள்ளது. இதனை போக்கும் விதமாக, இலவச மதிய உணவை அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அறிமுகப்படுத்தினார். பின்னர், அதனை சத்துணவு திட்டமாக எம்.ஜி.ஆர். மாற்றினார். தற்போது வரையில் அந்தப் பெயரிலேய அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.


கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் போது இந்த சத்துணவு திட்டத்தில் முட்டையைச் சேர்த்தார். பின்னர், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வாழைப் பழத்தை சேர்க்க ஆணையிட்டார். இப்படி, படிப்படியாக இந்த சத்துணவு திட்டத்திற்கு ஆட்சியாளர்கள் மெருகூட்டிக் கொண்டே வந்தனர்.


இதையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலத்தில் இந்த சத்துணவு திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் முயற்சியினால், கடந்த 2019-ம் ஆண்டு பிப்.,25-ம் தேதி மாநகராட்சி அமைப்புகளுக்குட்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காலை உணவாக, இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.


இந்த நிலையில், இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அமல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, மதிய உணவுக்கான செலவு போன்றவை பற்றிய விவரங்கள் முழுமையாக ஆராயப்பட்டுள்ளது. இதையடுத்து, வரவிருக்கம் பொங்கல் பரிசாக அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக, இன்று பிற்பகல் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டுவிட் ஒன்றை போட்டுள்ளார்.


அதில், குறிப்பிட்டிருப்பதாவது :- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவியருக்கு சத்துள்ள சிற்றுண்டி வழங்கும் 'காலை உணவு திட்டத்தை' தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது, எனத் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற போது, ஆட்சி 5 நாட்கள் கூட தாங்காது என எதிர்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், இதுபோன்ற சிறந்த திட்டங்களால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் மென்மேலும் பிரபலமாகி வருகிறார்.

1 கருத்து

 

Recent