மாதங்களில், தை மாதம் மிக அற்புதமான மாதம். இந்தத் தை பிறப்பு தினத்தை, பொங்கல் என்று அருமையாகக் கொண்டாடி வருகிறோம். என்னதான் கியாஸ், சிலிண்டர், மாடுலர் கிச்சனெல்லாம் வந்துவிட்டாலும் கூட, பொங்கல் நன்னாளில் புதிய மண்பானையும் அடுப்புமாக வைத்து, பொங்கலிடுவதுதான் நம் பாரம்பரியம். அதுவே இந்தப் பண்டிகையின் தாத்பரியம்.
இதற்காகவே புது அடுப்பு வாங்குவார்கள். புதிய மண்பானை வாங்குவார்கள். வெட்டவெளியில், வீட்டு வாசல், கொல்லைப்புறம், அபார்ட்மெண்ட்ஸ் என்றால் மொட்டை மாடி, கார் பார்க்கிங் ஏரியா என கோலமிட்டு, அடுப்பு வைத்து, மண்பானையில் பொங்கல் வைப்பார்கள்.
இன்னும் சில வீடுகளில் வெண்கலப்பானையில் பொங்கல் வைப்பார்கள். பொங்கலுக்கு வெண்கலப்பானையில் பொங்கல் வைக்கவேண்டும் என்பது மரபு என்பதால், பெண் வீட்டு சீர்வரிசையில் வெண்கலப் பானையும் முக்கிய இடம் வகிக்கும்.
வீட்டில் கோலமிடுங்கள். பொங்கல் பானை வைக்கும் இடத்தில் கோலமிடுங்கள். பொங்கல் வைத்து,. பானைக்கு சந்தன குங்குமமிட்டு, மஞ்சள் கிழங்கு கொத்துகளை கட்டி, பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று கூவி, சூரியனைப் பிரார்த்தனை செய்வோம்.
2020ம் ஆண்டில்... ஜனவரி 15ம் தேதி, நாளைய தினம் தை மாதம் பிறக்கிறது. பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் வைபவம் கொண்டாடப்படுகிற தை மாதமானது, காலை 5.35 மணிக்குப் பிறக்கிறது.
பொங்கல் படையலிட்டு சூரிய பகவானை வழிபடும் திருநாள் இது. இந்த முறை பொங்கல் வைக்கும் நேரம் காலை 9 முதல் 10 மணி வரை. 15ம் தேதி இந்த நேரம்தான் மிக மிக உன்னதமான ஹோரை. எனவே இந்த நேரத்தில் பொங்கலிடுவது சிறப்பு வாய்ந்தது. அமிர்த யோகம் நேரம் இது. பின்னர் 11 முதல் 12 மணி வரையில், சூரிய ஹோரையில், சூரிய நாராயணரைப் போற்றி வணங்கலாம்.
பொங்கும் பொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிக் குதூகலித்தால், மகாலக்ஷ்மியின் பேரருளைப் பெறலாம். வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்!
இந்த பொங்கல் திருநாளானது, எல்லார் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதியையும் ஆனந்தத்தையும், உயர்வையும் உன்னதங்களையும் வழங்கட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக