இந்த வலைப்பதிவில் தேடு

TNPSC Group 4 முறைகேடு- 99 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை!

வெள்ளி, 24 ஜனவரி, 2020




குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகுதிநீக்கம் செய்தனர். ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில்தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேரை  டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது.


இந்த 99 பேரும் இடைத்தரகர்களிடம் பெற்ற விடைகளை மறையக்கூடிய மையினால் தேர்வெழுதியுள்ளனர். ராமேஸ்வரம். கீழக்கரையை தவிர வேறு எந்த இடத்திலும் தவறு நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட  39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வான 39 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறகு சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.


தேர்வுப்பணி ஊழியர்களின் துணையுடன் 52 பேரின் விடைத்தாள்களின் திருத்தம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. 

வரும் காலங்களில் தவறுகள் நிகழாமல் தடுக்க தேர்வு நடைமுறையில் சீர்திருத்தம் நடந்து வருகிறது. தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வு எழுதுங்கள் என்று தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் இன்று (24.01.2020) காலை ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு தாலுக்கா தாசில்தார்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent