இந்த வலைப்பதிவில் தேடு

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு? - முழு விவரம்

புதன், 5 பிப்ரவரி, 2020



தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.


மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவின் வரைவு அறிக்கை கடந்த ஆண்டு வெளியானது. குழுவின் முழுமையான அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அந்த அறிக்கையில் 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்பட்டது.


மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய கல்வி கொள்கையை, இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன், பாஜ ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் கூட 5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற திட்டத்தை ஏற்கவில்லை. ஆனால் தமிழக அரசு இந்த புதிய கல்வி கொள்கையையும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதலே அதாவது வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் 5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.


தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையை ரத்து செய்துவிட்டு பொதுத்தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும். 

இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

பிஞ்சு உள்ளங்களில் நடத்தப்படும் கொடூரமான தாக்குதல். பொதுத்தேர்வு என்பது மாணவர்களை வடிகட்டுவதற்கான ஒரு முயற்சி” என்று கூறினார்.“சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை எதிர்மறைவான விளைவுகளையே ஏற்படுத்தும். இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பாமக சார்பில் அன்புமணி கூறி இருந்தார். தமிழக அரசு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டபோதே 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.


அதன்பின்னர், 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரமும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிலோ மீட்டர் தூரமும் உள்ள பள்ளியில் தேர்வெழுதுவார்கள் என்று அறிவித்தது. பின்னர், மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வெழுதலாம், வேறு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு மையத்தில் பணியாற்றுவார்கள் என்ற புதிய அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். இப்படி மாறி மாறி அமைச்சர் அறிவித்து வந்ததால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பம் அடைந்தனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதே தேவையில்லை என்று பலரும் கூறி வரும் நிலையில், எதற்காக தேர்வு மையங்கள் குறித்து குழப்பமான தகவல்களை தொடர்ந்து அமைச்சர் அறிவித்து வருகிறார் என்று தெரியவில்லை. இதுபோன்ற குழப்பமான அறிவிப்பு மாணவர்களிடையே உளவியல் சிக்கலை ஏற்படுத்தும்” என்றார்.

பெற்றோர்கள் சிலர் கூறும்போது, “மாணவர்களின் கல்வி திட்டத்தில் ஒரு புதிய மாற்றம் கொண்டு வரும்போது அதுகுறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய வேண்டாமா? அரசு தன்னிச்சையாக ஒரு முடிவை எப்படி எடுக்க முடியும்? தேர்வு எழுதப்போகிறவர்கள் மாணவர்கள். அவர்கள் மனதளவில் தயாராக வேண்டாமா? பக்குவம் இல்லாத வயதில் ஒரு மாணவனுக்கு இந்த தேர்வு அவசியமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். 


தமிழக அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள், சமூக சிந்தனையாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த திட்டத்தை கைவிடும் முடிவுக்கு தமிழக அரசு வந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 12.45 மணி வரை நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு நேற்று மதியம் 1.45 மணிக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது: 5 மற்றும் 8வது வகுப்பு மாணவர்களுக்கு 2019-20ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளி கல்வி துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. 


இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அவற்றை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நீண்டநேர விவாதத்துக்கு பிறகே, 5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டாம். பழைய நடைமுறையையே பின்பற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent