தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் வெளியாகி பலர் கைது செய்யப்படும் நிலையில், தற்போது கணினி ஆசிரியர் கிரேடு 1க்கான தேர்வில் 119 மையங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கணிணி ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்4, குரூப் 2ஏ ஆகியவற்றில் முறைகேடு செய்து தேர்ச்சி ெபற்றவர்கள், இடைத்தரகர்கள், பணம் கொடுத்தவர்கள் என பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி ஆசிரியர் கிரேடு 1 தேர்வில் 119 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அவற்றையும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கணினி ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து கணினி ஆசிரியர்கள் கிரேடு 1 தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கணினி ஆசிரியர்கள் கிரேடு-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 2019ம் ஆண்டு நடந்தது. இத்தேர்வில் 27 ஆயிரம் பங்கேற்றனர். இவர்களுக்காக தமிழகத்தில் 119 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதற்காக கணினி வசதி இருந்த தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடந்த தேர்வின்போது, சில தேர்வு மையங்களில் சர்வர் சரியாக வேலை செய்யவில்லை. இணைய தளமும் வேலை செய்யவில்லை. இதனால் அந்த மையங்களில் தேர்வு இரவு 8 மணி வரை தேர்வு நடந்தது. இருப்பினும், கணினி வழித் தேர்வில் பலர் குழுக்களாக இருந்து தேர்வு எழுதினர்.
செல்போன்களை பார்த்தும் தேர்வு எழுதியுள்ளனர். சர்வர் வேலை செய்யாத மையங்களில் தேர்வு எழுதியோரின் உறவினர்களும் தேர்வு மைய அறைக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இது போல் 27 கல்லூரிகளில் நடந்துள்ளது. கணினி தேர்வு எ ழுதியோர் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு முறையிட்டனர்.
ஆனால், இது போன்ற குழப்பம் 3 தேர்வு மையங்களில்தான் நடந்தது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துவிட்டது. பின்னர் 25ம் தேதி 3 மையங்களில் மட்டும் மறு தேர்வு நடத்தினர்.
இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தெரிவு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 1500 பேர் கணினி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 1500 பேர் பேரில் 700 பேர் கணினி தேர்வில் பார்த்து எழுதியவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து பிரச்னை எழுந்ததால் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை அடிப்படையில் சமப்படுத்தும் பணியை(normalization) செ ய்வதாக கூறி 25 ஆயிரம் பேருக்கு செய்யப்பட்டது. இது போன்ற பிரச்னைகளில் சிக்கியுள் கணினி ஆசிரியர் தேர்வில் பங்கு பெற்றவர்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழ் வழியில் கணினி பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான விதிகளை கணினி ஆசிரியர் தேர்விலும் கொண்டு வரப் பார்க்கின்றனர்.
இதனால், நல்ல முறையில் படித்து தேர்வு எழுதியவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தெரிவுப்பட்டியலில் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் இருக்கிறது. இது குறித்து அரசு உடனடியாக தலையிட்டு, 119 தேர்வு மையங்களிலும் விசாரணை நடத்த வேண்டும். தேர்வின்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் பார்வையிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக