அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கவுன்சிலிங் முறையில் இடமாற்றம் செய்யப்பட்டது.
கடந்த, 2019ல் நடத்தப்பட்ட கவுன்சிலிங்குக்கு பின், பள்ளிகளில் ஏற்பட்ட காலியிடங்களில் பதவி உயர்வு மற்றும் புதிய நியமனங்கள் வழியாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை துவங்கியுள்ளது.முதற்கட்டமாக, தலைமை ஆசிரியர் பதவிக்கான காலியிடங்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இந்த பணியை மேற்கொண்டுஉள்ளனர்.
தலைமை ஆசிரியர் பதவி காலியாக உள்ள பள்ளிகள், மாவட்டங்கள், அந்த பள்ளியில் உள்ள மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை ஆகிய விபரங்களையும், இந்த பட்டியலில் இணைத்து தர வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.ஜூன், 1, 2020 நிலவரப்படி, காலியிட விபரங்களை பட்டியல் எடுத்து, w1sec.tndse@nic.in என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே காலியிட பட்டியல் தயாரித்திருந்தால், தற்போதையநிலவரப்படி, அதில் உள்ள விபரங்களை சரிபார்க்கவும், முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பணிகள் முடிந்ததும், காலியிடங்களில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமிப்பதா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் தலைமை ஆசிரியர் பதவி வழங்குவதா என்று முடிவு செய்யப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக