இந்த வலைப்பதிவில் தேடு

முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை

செவ்வாய், 3 மார்ச், 2020



ஒருவர் சிறு வயதில் என்ன மாதிரியான வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் கொண்டு உள்ளாரோ அவற்றை வைத்துதான், அந்த நபரின்(ஆண், பெண் இரு பாலரும்) முதுமை காலத்திய உடல் நலம் முழுவதும் தீர்மானிக்கப்படுகிறது.


அந்த அளவிற்கு, சிறு வயது தொடங்கி, இளமைக் காலம் வரை நாம் வழக்கப்படுத்திக் கொள்கிற செயல்கள், உணவு முறைகள், உடற்பயிற்சிகள் செய்தல், நல்ல மற்றும் தீய பழக்கங்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. அதனடிப்படையில், உடல் தளர்ச்சி அடைய தொடங்கும் காலக்கட்டத்திலும், எண் சாண் உடம்பைச் சீராகப் பேணிப் பாதுகாப்பது அவசியம் ஆகிறது. அதற்கான எளிய வழிமுறைகள் இங்கே…

பதற்றம், நிதானமின்மை ஆகிய இரண்டும் நம்முடைய உடல்நலத்தைச் சீர்குலைக்கும் காரணிகளில் மிக முக்கியமானவையாக இருக்கிறது

* இளம் வயதில், உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பது, முதுமைப் பருவத்தில், ஆரோக்கியத்துடன் இருக்க வழி செய்யும். அதற்காக, ‘ஸ்லிம்’ ஆக இருக்கிறேன் என்ற பெயரில், எலும்பும், தோலுமாக உருவம் கொண்டு இருக்கக் கூடாது; வயதுக்கு ஏற்ற உடல் எடையைக் கொண்டு இருப்பது அவசியம்; உதாரணத்துக்கு, மனிதனின் சராசரி உயரமான 168 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர் 54 கிலோவிலிருந்து, 67 கிலோ வரை எடை கொண்டு இருக்கலாம்.

* வயதான காலத்தில், நாம் உடல் நலத்துடன் திகழ, கட்டுக்கோப்பான உடல் வாகு எவ்வளவு இன்றியமையாத்தோ, அதற்கு இணையாக, உணவு கட்டுப்பாடும் அவசியம். அதற்காக, பட்டினி கிடக்க வேண்டியது இல்லை.

இளம் வயதில்தான், செரிமான குறைபாடு எதுவும் வராது; அதை உணர்த்தும் வகையில், ‘கல்லைத் தின்றாலும், செரிக்கும் வயசு’ என்ற பழமொழி வழக்கத்தில் காணப்படுகிறது. அதற்காக, உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கை உண்டாக்கும் எந்த உணவுப்பண்டத்தையும் சாப்பிடக் கூடாது.

* இளைய தலைமுறையினரிடம் மது, புகையிலை மற்றும் பாக்கு போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. அதனால், வயோதிக காலத்தில் ஆரோக்கியத்துடன் வாழ, தீங்கை விளைவிக்கும் மது உள்ளிட்ட போதை அரக்கனை இளமையில் தவிர்ப்பது நல்லது.

* பதற்றம் மற்றும் நிதானமின்மை ஆகிய இரண்டும் நம்முடைய உடல் நலத்தைச் சீர்குலைக்கும் காரணிகளில் மிக முக்கியமானவையாக இருக்கிறது. எனவே, அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இயந்திரமயமான வாழ்க்கை முறை, வேலைச்சுமை போன்ற காரணங்களால் வாலிப பருவத்திலேயே ஆரோக்கியம் பறிபோகத் தொடங்கி விடுகிறது.


ஆகவே, இளம் பருவத்தினர் தங்களுடைய வாழ்க்கையில், கவனச் சிதறலுக்குக் காரணமான ‘பதற்றம்,  ‘நிதானமின்மை ஆகியவற்றிற்கு எந்தக் காரணம் கொண்டும் இடம் தரக் கூடாது.

* இளம் வயதினரே உங்களைச் செயல்பட விடாமல், தடுத்து, ஓரிடத்தில் முடங்கச் செய்யும், கவலைக்கு உள்ளாகுகிறவை மற்றும் குழப்பமான மனநிலைக்கு உள்ளாக்கும் காரணிகளை நேர்மறையான எண்ணங்களுடன் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களின் தோற்றப் பொலிவை மெருகேற்றும்.

* மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள், மூளைக்காய்ச்சல் ஆகிய பாதிப்புகளுக்கு ஹை-பிளட் பிரஷர் முக்கிய காரணமாகிறது. அதனால், நாற்பது வயதை நெருங்கும் பட்சத்தில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். பிரச்னை இருக்கும்பட்சத்தில் அதற்கேற்றவாறு மருத்துவரிடம் தகுந்த சிகிச்சைகளைப் பெறுவதும் அவசியம்.

* முதுமைப் பருவத்தில், இளமைத் தோற்றத்துடன் திகழ, எலும்பு மற்றும் தசை நார்களை வலுப்படுத்தக்கூடிய வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அதேவேளையில் எளிதில் செரிமானம் ஆகாத, எண்ணெயில் நன்கு பொரித்த, கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுப்பண்டங்களைத் தவிர்ப்பதும் நல்லது.


*‘நொறுங்கத் தின்றால் நூறு வயசு’ என்பது முதுமொழி. உங்கள்  உணவுமுறை சைவம், அசைவம் என எதுவாக இருந்தாலும் அவசரகதியில் விழுங்காமல், ஆற அமர மென்று சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.

தொகுப்பு : விஜயகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent