இன்றைய சூழலில் ஆசிரியர்கள் பெரும்பாலும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களாகவும், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய பாதிப்பு போன்ற நோய்கள் உடையவர்களாகவும் உள்ளனர்.
மாணவர்கள் மீது அக்கறைகொள்ளும் ஆசிரியர்கள் தன் ஆரோக்கியத்தின் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம் என்பதை *சகோதரர் ஜெயா வெங்கட்* அவர்களது இழப்பு உணர்த்தியுள்ளது..
அவர் இருக்கும்பொழுதும் ஒரு பாடமாக....
அவரது இழப்பும் ஒரு பாடமாக....
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறையும், உடற்பயிற்சியும்,
மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம்..
ஆசிரியர் சமூகத்தை நம்பி மாணவர்கள் இருப்பதைப்போல , ஆசிரியர்களின் குடும்பமும் இருக்கிறது என்பதை உணர வேண்டியது அவசியமாகிறது...
இறப்பு என்பது இயற்கைதான்..ஆனால்
அது பேரிழப்பாக மாறிவிடக்கூடாது..
அக்கறையுடன்
சி.சதிஷ்குமார்
கல்வியாளர்கள் சங்கமம்
உடல் நலம் காப்போம்; உயிர் நலம் வளர்ப்போம்:
கட்டடத்துக்கு நல்ல அஸ்திவாரம் போல், கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல், வண்டிக்கு அச்சாணி போல், மனிதனுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவ பெரிதும் உதவுவது உடல் நலமே.
''அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது'' என்பது அவ்வையின் அமுதமொழி. சமையல் சரியில்லைன்னா ஒரு நாள் துன்பம், அறுவடை சரியில்லைன்னா நான்கு மாத துன்பம், படிப்பு சரியில்லைன்னா ஒரு வருட துன்பம். ஆனால் உடம்பு சரியில்லைன்னா ஆயுள் முழுவதும் துன்பம். ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடுத்த இனிய வாழ்க்கையில், உடல் என்பது ஒரு அதிசயம்.
''காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா'' என்று சித்தர்கள், அன்றைக்கு உடம்பைப்பற்றி சொல்லி வைத்தார்கள். பின்னால் வந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை, ''காயமே இது மெய்யடா, இதில் கண்ணும் கருத்தும் வையடா, நோயில்லாமல் காத்து நுாறாண்டுகள் உய்யடா'' என உடம்பின் மேன்மையை, அக்கறையோடு விளக்கினார்.
திருமூலரும் தனது திருமந்திரத்திலேயே,
''உடம்பினை முன்னும் இருக்கென்று இருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!''
என உடம்பின் முக்கியத்துவத்தை பாடல் மூலம் விளக்குகிறார்.
உடலும் ஆரோக்கியமும்
இன்றைய சூழலில் எல்லா பொருளும் வீடு தேடி வரும் காலம். நாம் நினைத்தால் எந்தப் பொருளையும் விலைக்கு வாங்கலாம். அதற்கு பணம் மட்டும் தேவை. ஆனால் வாங்க முடியாத பொருள் உண்டென்றால் அது ஆரோக்கியம் மட்டும் தான். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி.
முன்பு இருவர் சந்தித்து கொண்டால் குடும்ப விபரங்கள், விவசாயம், இயற்கை இவைகளை தான் பேசினார்கள். ஆனால் இன்று சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால் என்று தான் பேசுகிறார்கள். மொத்தத்தில் நிறைய மனிதர்கள் நடமாடும் வியாதி கூடங்களாகி விட்டார்கள். நெஞ்சு நிறைய பயம், பாக்கெட் நிறைய மாத்திரைகள், உடல் உறுப்புகளின் குறைபாடு, பலவீனம் போன்ற பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பது இன்று சவாலாக உள்ளது.
சுவையும், சுகரும் ஒரு காலத்திலே நாமெல்லாம் ஒவ்வொரு உணவையும் சாப்பிடும்போது, அதன் சுவையறிந்து சாப்பிட்டோம். ஆனால் இன்று 'சுவை' பார்த்து சாப்பிட்ட காலம் போய், 'சுகர்' பார்த்து சாப்பிடும் காலமாக மாறி விட்டது. இதனால் உணவே மருந்து என்பது மாறி, மருந்தே உணவாகி விடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார், ''என் மனைவியும், சுகரும் ஒண்ணு,'' என்று. இன்னொருவர் ''எப்படி?,'' என்று கேட்டார். ''இரண்டையும் என்னால் கன்ட்ரோல் பண்ண முடியவில்லை,'' என்றார்.
அந்தளவு உணவில் கட்டுப்பாடு தேவை. அன்றைக்கெல்லாம் உணவு உண்பவர்களை பிரித்து சொல்லும் போது ஒரு வேளை உண்பவன் 'யோகி', இரு வேளை உண்பவன் 'போகி', மூன்று வேளை உண்பவன் 'ரோகி', நான்கு வேளை உண்பவன் 'துரோகி' என பிரித்தார்கள்.
உணவில் கவனம், அக்கறையும் அன்று இருந்தது. ''பசியெடுத்த பின் கையை வாய்க்குள் கொண்டு போகிறவனும், பசியடங்குவதற்குள் கையை வாயை விட்டு எடுப்பவனும், என்றைக்கும் நோய்வாய்ப்பட மாட்டான்,'' என கவிப்பேரசு வைரமுத்து கூறுவார். எப்போதும் வயிற்றை அரைவயிறு உணவாலும்,
கால்வயிறு தண்ணீராலும், கால் வயிற்றை காலியாகவும், வைத்திருக்க வேண்டுமென்பார்கள்.
அறிஞர் விஸ்வேஸ்வரய்யா
இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் மேதை அறிஞர் விஸ்வேஸ்வரய்யா. 103 ஆண்டு வாழ்ந்தவர். 100 ஆண்டு மகிழ்ச்சியாக வாழ, அவர் கூறும் யோசனைகள்:
1. அளவோடு சாப்பிடு
2. எப்போதும் மகிழ்ச்சியாயிரு
3. மனசாட்சிக்கு விரோதமான செயலை
செய்யாதே
4. நாள்தோறும் குறித்த நேரத்தில்
துாங்கச் செல்
5. கடன் வாங்காமல் வருமானத்துக்குள்
வாழ்க்கை நடத்து
6. சம்பாதிக்கும்போதே சேமி
7. எப்போதும் சுறுசுறுப்புடன் இரு
8. களைப்பு ஏற்படும் வரை வேலை செய்
9. ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கை நடத்து என்றார்.
உடல் நலமும், உடற்பயிற்சியும் பாரதியார், ''விசையுறு பந்தினைப் போல் உள்ளம் மேவியபடி செல்லும் உடல் கேட்டேன்,'' என்றார். உடல் வலுஅடைய எத்தனையோ உடற்பயிற்சிகள் இருந்தாலும், எல்லோரும் பின்பற்றக்கூடிய
எளிதான பயிற்சி நடைப்பயிற்சி. அதனால் தான் நடைப்பயிற்சியை உடற்பயிற்சிகளின் அரசன் என்கிறார்கள். ஏனெனில் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளும் செயல்படும் ஒரே பயிற்சி நடைப்பயிற்சி.
எந்தவித கருவிகளும், பணச்செலவும் இல்லாத ஒரு பயிற்சி நடைப்பயிற்சி. தினமும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு 'என்டார்மின்' எனும் ஹார்மோன் சுரக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கிறது. முழங்கால் வலி தடுக்கப்படுகிறது. எலும்புகளை சுற்றியுள்ள தசைகள் வலுவடைகின்றன.
கால் தசைகள் இரண்டாவது இதயம் போல் செயல்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். நடைப்பயிற்சி செய்பவர்கள் இரண்டு இதயங்களுக்கு சொந்தக்காரர்கள் என்பது மருத்துவம்.
உடல் நலம் காப்பதில் இதுபோன்ற பயிற்சிகளை இனியாவது தொடர வேண்டும்.
உடலில் அமைச்சரவை இறைவன் கொடுத்த இந்த உடல் அமைப்பை ஒரு அமைச்சரவைக்கு ஒப்பாக சொல்வார்கள். இதில் மூளை என்பது முதலமைச்சர். தலை - கல்வி அமைச்சர், கண் - சட்ட அமைச்சர், காது - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், மூக்கு - சுகாதாரத்துறை அமைச்சர், பல் - மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், கைகள் - தொழில் துறை அமைச்சர், இதயம் - நிதி அமைச்சர், வயிறு - உணவுத்துறை அமைச்சர், தோல் - பாதுகாப்பு அமைச்சர், கால் - போக்குவரத்துத்துறை அமைச்சர், நுரையீரல் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்புகள் செய்யும் பணிகளை பிரித்து சொல்வார்கள். இவ்வளவு சிறப்பான, உன்னதமான உடம்பை, நாம் போற்றி பாதுகாக்க வேண்டுமல்லவா?
உடல் ஒரு தொழிற்சாலை இந்த உலகில் எது மிகப்பெரிய தொழிற்சாலை என்றால் சிலர் கார் தொழிற்சாலை என்பார்கள். சிலர் இரும்புத் தொழிற்சாலை என்பார்கள். பெரிய தொழிற்சாலை நம் உடம்பு தான். ஏனென்றால், அன்றாடம் நாம் உண்ணும் மென்மையான, கடினமான உணவுகளை சில மணி நேரத்தில் செரிக்கச் செய்து கழிவாக்குகிறதே, இதுவல்லவா ஆச்சரியத்திலும், ஆச்சரியம். இதை நாம் பாதுகாக்க வேண்டாமா?
விவேக சிந்தாமணி சொல்கிறது...''அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோகரும்பு கோணிடில் கட்டியம் பாகுமாம்இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்?,''
உடல் சுவாசம், உயிர் சுவாசம் என உடம்பில் ரத்த ஓட்டம் சீராக இயங்க வைப்பது நரம்பு மண்டலமே. எனவே நாடி நரம்புகளை பாதுகாக்க வேண்டுமென்கிறார்.
உடல் நலம் ஓர் உன்னதம் இயற்கை மருத்துவம் சொல்கிறது, உலகில் ஐந்து சிறந்த மருத்துவர்கள் யாரென்றால் சூரிய வெளிச்சம், உடற்பயிற்சி, அளவான மற்றும் சத்தான உணவு, ஓய்வு, தன்னம்பிக்கை என்கிறது.
பாரதி சொன்னது போல சூரிய ஒளியை கண்டவுடன் சுடர் முகம் துாக்கி சிரிக்கும், வண்ண மலர்களை போல, மனித முகங்கள் மகிழ்ச்சியில் அன்றாடம் விழி மலர்ந்தால், உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுக்கும். உடலில் பொலிவும், வலியும் பொங்கி வழிய வாழ்க்கை வசந்த சோலையாக இருக்கும் என்கிறார்.
நல்ல உடல் நலம் தானாக கிடைக்கக்கூடிய ஒன்று அல்ல. அதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மேல்நாட்டு அறிஞர் ராபர்ட் ஸ்கல்லர், ''நல்ல உடல் நலத்தை ஒரு பயணம் என்கிறார். நலமான உடலில் தான் நல்ல மணம் இருக்கும். எனவே பேணிக் காப்போம் உடல் நலத்தை, மறப்போம் கவலையை, வாழ்வோம் சிறப்போடு..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக