இந்த வலைப்பதிவில் தேடு

தங்கம் மட்டுமன்று, வேறு எந்த வழிகளில் எளியமையாக அட்சய திரிதியையை வழிபடலாம்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

Posted By Pallikalvi Tn




தங்கம் உலக அளவில் மிகவும் விலையுயர்ந்து காணப்படுகிறது. இன்றைய சூழலில் அதை யாரும் வாங்க முடியாத நிலை நிலவுகிறது. ஆனால், அன்னை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளாக நம் முன்னோர்கள் தங்கத்தை மட்டும் குறிப்பிடவில்லை. அன்னை வாசம் செய்யும் 108 பொருள்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் அட்சய திரிதியை வந்துவிட்டால் நகைக்கடைகளில் கூட்டம் நிறைந்துவழியும். மக்கள் கொஞ்சமேனும் தங்கம் வாங்கி வைத்து அன்னை மகாலட்சுமியை வழிபட விரும்புவர். அதன் காரணம் இரண்டு. ஒன்று தங்கம் அன்னை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருள் என்கின்றன சாஸ்திரங்கள்.

மற்றொன்று அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் அது மேன்மேலும் பல்கிப் பெருகும் என்னும் நம்பிக்கை. உண்மையில் அட்சய திரிதியையின் சிறப்புகள் என்ன? அன்று கட்டாயம் தங்கம் வாங்கித்தான் அன்னை மகாலட்சுமியை வழிபட வேண்டுமா என்னும் கேள்விகள் பலரின் மனதிலும் உள்ளன.




அள்ள அள்ளக் குறையாததே அட்சயம்.

சயம் என்றால் அழிதல். அட்சயம் என்றால் அழியாதது. எது அழியாமல் பல்கிப் பெருகுகிறதோ அதுவே அட்சயம் எனப்படும். சித்திரை மாதம் வளர்பிறை திரிதியையே அட்சய திரிதியை என்று போற்றப்படுகிறது. அட்சய திரிதியை நாளில் கிடைக்கும் எதுவும் வாழ்வில் குறைவில்லாது நிறைந்திருக்கும் என்பது ஐதிகம். மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது திரௌபதி சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரத்தைப் பெற்ற நாள் அட்சய திரிதியை என்று சொல்லப்படுகிறது. 

அட்சய திரிதியை நாளில் தானம் செய்தால் அதன் பலன் பன்மடங்கு உயரும் என்கின்றன சாஸ்திரங்கள். அவ்வாறு தானம் செய்த ஒரு திருடன் அரச வாழ்வு பெற்றான் என்றும் ஞானநூல்கள் கூறுகின்றன. எனவே அட்சய திரிதியை என்பது நம்முடைய நற்செயல்களால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளை, நற்செயல்களை அதிகப்படுத்தும் நாள் என்பதே சரியான விளக்கமாகும்.

தங்கத்தில் மட்டுமா அன்னை வாசம் செய்கிறாள்...

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்குவதன் காரணம் அன்னை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருள்களில் ஒன்று அது என்பதுதான். மேலும் இந்த உலகில் மிகவும் விலையுயர்ந்ததாகப் போற்றப்படுவது தங்கம். இன்றுகூட தங்கம் உலக அளவில் மிகவும் விலையுயர்ந்து காணப்படுகிறது. இன்றைய சூழலில் அதை யாரும் வாங்க முடியாத நிலை நிலவுகிறது. ஆனால், அன்னை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருள்களாக நம் முன்னோர்கள் தங்கத்தை மட்டும் குறிப்பிடவில்லை.



கல் உப்பு



வெற்றிலையின் மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு. மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், காய்ச்சிய பால், நெய், கல் உப்பு என 108 பொருள்களை மகாலட்சுமியின் சாந்நித்யம் நிறைந்த பொருள்கள் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். 

இவை அனைத்துமே சம அளவு மதிப்பும் சம அளவு வாழ்வியல் முக்கியத்துவமும் வாய்ந்தவை. அன்னையை வழிபடும்போது இந்தப் பொருள்களைக்கொண்டு வழிபடுவது என்பது மேலும் பல நன்மைகளை நமக்கு அளிக்கும். எனவே இந்த அட்சய திரிதியை அன்று மிக எளிமையான முறையில் நம் வீட்டில் உள்ள பொருள்களைக்கொண்டே அன்னையை வழிபடலாம். அவை என்னென்ன, எப்படி வழிபடுவது என்பது குறித்து ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகனிடம் கேட்டோம்.



“அட்சய திரிதியை நாள் மிகவும் புண்ணிய தினமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யும் வழிபாடுகள், தானங்கள் அனைத்தும் பல் மடங்கு பெருகும் என்பது ஐதிகம். இந்த நாளில் லட்சுமி குபேர வழிபாடு செய்வது மிகவும் புண்ணிய பலன்களைத் தரும். இந்த பூஜையின் போது அன்னையை வழிபட வீட்டிலிருக்கும் எளிய பொருள்களை வைத்து வழிபாடு செய்யலாம். 

வீட்டில் இருக்கும் சுவாமி படங்கள் எதுவாக இருந்தாலும் அதைத் தூய்மை செய்து சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். கிடைக்கும் மலர்களை சுவாமி படத்துக்கு சாத்தி, சுவாமிக்கு முன்பாக, உப்பு, காய்ச்சிய பால், துளசி, பருப்பு, வெல்லம் ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும். இவை அனைத்தும் மகாலட்சுமியின் கடாட்சம் நிரம்பிய பொருள்கள் என்பதால் அன்னை அதில் வாசம் செய்வதாக ஐதிகம்.


முடிந்தால் இந்த நாளில் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று மிகக் குறைந்த அளவு உப்பு அல்லது அரிசி வாங்குவது நல்லது. அவ்வாறு வாங்கியவற்றை அன்னைக்கு முன்பாக வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. இந்த நாளில் பெருமாளையும் மகாலட்சுமியையும் குபேர பகவானையும் நினைத்து வணங்கிட அவர்களின் பரிபூரண அருள் கிடைக்கும். 

மேலும் இந்த நாளின் மற்றுமொரு சிறப்பம்சம் தானம் செய்வது. இன்று தானம் செய்தால் நமக்கு சகலமும் பல மடங்காகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

நாடு இன்றிருக்கும் நிலையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பணமாக உதவ முடிகிறவர்கள் பணமாகவோ, உணவு, உடை என்று மற்றவர்களுக்கு அதிலும் நம் அருகே வாழும் தேவை உள்ள மக்களுக்கு தானமளித்தால் அது மிகவும் பயனுள்ளதாகும். தேவையுள்ளவர்கள் நம் அருகேயே இருப்பார்கள். அவர்களைக் கண்டு அவர்களுக்கு உதவுங்கள். அன்னை மகாலட்சுமி வரும் நாள்களில் நமக்கும் நம் நாட்டுக்கும் நல்வழி காட்டுவாள்” என்றார்.




அட்சய திரிதியை வழிபாடு குறித்து திருநள்ளாறு கோட்டீஸ்வர சிவாசார்யரிடம் கேட்டோம். 



“சார்வரி ஆண்டில் மழை குறையும் என்று சொல்கிறார்கள். அதனால் இந்த ஆண்டு நம் வழிபாடுகளில் எல்லாம் நல்ல மழைப்பொழிவு வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும். வீட்டில் பூஜை அறையில் சுவாமிக்கு முன்பாக தூய பாத்திரம் ஒன்றில் நல்ல சுத்தமான நீரை அட்சய திரிதியை நாளில் மகாலட்சுமி தாயாருக்குப் படைப்போம். 

தண்ணீரே இந்த உலகின் ஆதாரம் என்கிறது வேதம். அந்த ஆதாரத்தை அன்னை நமக்கு அனுகிரகித்து அருளவேண்டும் என்பது நம் பிரார்த்தனையாக இருக்கட்டும். இன்று இருக்கும் அசாதாரண சூழ்நிலையை மாற்றுமாறு தினமும் வீட்டிலேயே தெய்வ வழிபாடு செய்வோம். அன்னை மகாலட்சுமி அதற்கு அனுகிரகம் செய்வாள்” என்று கூறினார்.




திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தானே துணை... அட்சய திரிதியை நாளில் நாம் அந்த தெய்வத்தை வணங்கி நலம் பெறுவோம். இந்த ஆண்டு அட்சய திரிதியை திதி 25.4.2020 மற்றும் 26.4.2020 ஆகிய இரண்டு நாள்களிலும் வருகிறது.

25.4.2020 அன்று காலை 11.24 முதல் 26.4.2020 அன்று பகல் 12.25 வரை திரிதியை திதி இருக்கிறது. எனவே இந்த இரண்டு நாள்களும் அன்னை மகாலட்சுமியை வணங்கி திருவருளும் குருவருளும் கிடைக்கப் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent