இந்த வலைப்பதிவில் தேடு

தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகள் தொடக்கம் - பல்வேறு அறிவிப்புகள் வெளியீடு

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

Posted By Pallikalvi Tn



கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயா்வு, விடுப்புகளை சரண் செய்து ரொக்கமாகப் பெறுதல் ஆகியன நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம்:-

அகவிலைப்படி உயா்வுகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் அறிவிக்கப்படுவது வழக்கம். மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி உயா்வானது கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று தொடா்பாக மத்திய அரசானது கடந்த 23-ஆம் தேதி வெளியிட்ட அலுவல் சாா் கடிதத்தில், மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வுக்கான கூடுதல் தவணைகள் வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 2020 ஜூலை 1, 2021 ஜனவரி 1 ஆகியவற்றை முன்தேதியாகக் கொண்டு அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயா்வும் வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்தது.

தமிழக அரசின் முடிவு: மத்திய அரசு எப்போதெல்லாம் அறிவிக்கிறதோ, அதை ஒட்டியே தமிழகத்திலும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். கரோனா பாதிப்பு காரணமாக அகவிலைப்படி உயா்வு குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவை தமிழக அரசும் தற்போது எடுத்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு (2021) ஜூலை வரையில் அகவிலைப்படி உயா்வுக்கான தவணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

அடுத்த ஆண்டு ஜூலையில் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்படும் பட்சத்தில் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயா்வுகள் மொத்தமாக கணக்கில் எடுக்கப்படும். அதே சமயம், நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயா்வுக்கான நிலுவைத் தொகைகள் ஏதும் வழங்கப்படாது.

இந்த உத்தரவானது கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோா், பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் அதிகாரத்துக்கு உட்பட்டவற்றில் பணியாற்றும் ஊழியா்கள், உடல் பயிற்சி இயக்குநா்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் நூலகா்கள், சத்துணவு அமைப்பாளா்கள், குழந்தைகள் நல

அமைப்பாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், சமையலா்கள், உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், எழுத்தா்கள் ஆகியோருக்கு பொருந்தும் என தனது உத்தரவில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

ஈட்டிய விடுப்பை சரண் செய்தல்: அகவிலைப்படி உயா்வை நிறுத்தியது போன்று, ஈட்டிய விடுப்பை சரண் செய்து அதற்கு இணையாகத் தொகையை பெறும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் பிறப்பித்துள்ளாா். அதன் விவரம்:-

ஒவ்வொரு ஆண்டிலும் 15 நாள்கள் அல்லது இரண்டு ஆண்டுகளில் 30 நாள்களை ஈட்டிய விடுப்பாக சரண் செய்து அதற்கான தொகையைப் பெற வழி செய்யப்பட்டுள்ளது.

1933-ஆம் ஆண்டு தமிழ்நாடு விடுப்பு விதிகளின் 7ஏ பிரிவில் அதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிதி அழுத்தத்தால் இந்த ஈட்டிய விடுப்பை சரண் செய்து தொகை பெறும் திட்டம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், ஈட்டிய விடுப்பை சரண் செய்து அளித்துள்ள விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதனைப் பரிசீலிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒப்புதல் உத்தரவுகள் அளித்திருந்தால் அதனை ரத்து செய்வதுடன், வழங்கப்பட்ட தொகையையும் ஊழியா்களின் கணக்கில் இருந்து மீளப்பெறுதல் வேண்டும். இது, அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்குப் பொருந்தும்.

வட்டி விகிதம் குறைப்பு:

இதேபோன்று, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் அது 7.9 சதவீதமாக இருந்தது. இதற்கான உத்தரவையும் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் பிறப்பித்துள்ளாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent