இந்த வலைப்பதிவில் தேடு

"ஆண்களை காப்பாத்துங்க" - முதல்வர் தனிப்பிரிவுக்கு இப்படி ஒரு மனு

வியாழன், 23 ஏப்ரல், 2020

Posted By Pallikalvi Tn



ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அனைவரும் முடங்கியுள்ளனர். அதன்காரணமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஆண்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்தச் சூழலில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அருள் துமிலன், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது, ` கொரோனா எனும் கொடிய வைரஸ் நோயால் அச்சத்திலும் மரணபீதியிலும் உலக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் வீட்டில் அடைப்பட்டுக் கிடக்கும் ஆண்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.


குடும்ப வன்முறை என்பது உடல்ரீதியாக மட்டுமன்றி மனரீதியாகவும் ஆண்களை ஆட்டிப்படைக்கிறது. அது மட்டுமல்லாமல் பல ஆண்களிடம், சட்டத்தைக் காட்டி அவர்களின் மனைவிகள் மிரட்டுகின்றனர். உண்மை நிலை இவ்வாறு இருக்க குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்கிற காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவியின் அறிக்கை வேதனையை அதிகரிக்கிறது.

உண்மையில் பல கணவன்கள் (ஆண்கள்) தனது சொந்த வீட்டில் மனதளவில் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் நிராயுதபாணியாகவும் தான் சந்திக்கும் குடும்ப வன்முறை குறித்து புகார் கொடுக்க அல்லது தான் அனுபவித்து வரும் இன்னல்கள் துயரங்களைத் தெரிவித்து பாதுகாப்பு தேட இடமின்றியும் வாழ்ந்து வருகிறார்கள். இன்னும் பலர் சொந்த வீட்டில் கேவலமாக நடத்தப்பட்டு உணவுக்காக வீட்டிலேயே கை ஏந்தும் நிலையில் இருக்கிறார்கள்.



நிதர்சனம் இவ்வாறு இருக்க தேசிய மகளிர் ஆணையம் மற்றம் தமிழக மகளிர் ஆணையம் ஆகியவை இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அறிக்கை கொடுத்துள்ளன. ஆண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளை முறையிடவே இடமில்லாத சூழலில் இந்த அறிக்கை ஒரு தலைபட்சமானது ஆகும். அனைவருக்கும் சமமான நீதி எனும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுவதும் ஆகும்.

எனவே கொரோனா எனும் கொடும் வைரஸைவிட குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாத்திட குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்னைகளைத் தெரிவிக்க ஒரு ஹெலப் லைன் சேவையை அரசு உடனடியாக நிறுவ வேண்டும்.


ஆண்கள் தெரிவிக்கும் குடும்ப வன்முறை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஆண்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆண்கள் ஆணையம் அமைக்கவும் ஆண் பாதுகாப்பு சங்கம் கேட்டுக்கொள்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் அருள்துமிலனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கணவர்களுக்கு மனைவிகளால் பாதிப்பு என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துகிறீர்கள்?




தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் இ-மெயிலுக்கும் நிர்வாகிகளின் செல்போன் நம்பர்களுக்கும் ஊரடங்கு காலகட்டத்தில் மனைவிகளால் பாதிக்கப்படும் ஆண்கள் புகாரளித்துவருகின்றனர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் புகார்கள் வந்துள்ளன. அவர்களுக்குத் தேவையான கவுன்சலிங் அளித்துள்ளோம். மேலும், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்

ஊரடங்கு காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு காவல்பிரிவு கூறியுள்ளது. ஆனால் நீங்கள் ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகிறீர்களே?


சட்டத்தின்முன் அனைவரும் சமம். ஊரடங்கு காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிட ஆணையம், காவல்துறை பிரிவுகள் உள்ளன. ஆனால் ஆண்களுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. பொதுவாக பெண்களுக்கு சாதகமாகத்ததான் சட்டங்கள் உள்ளன. அதைச் சில பெண்கள் தவறாகப் பயன்படுத்தி ஆண்களை பழிவாங்குகின்றனர்.

அதற்கு பல உண்மைச் சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம். மனைவிகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்காகத்தான் இந்தச் சங்கத்தை உருவாக்கி அவர்களுக்காகக் குரல் கொடுத்துவருகிறோம். பல வழக்குகளிலிருந்து தவறே செய்யாத ஆண்களைக் காப்பாற்றியுள்ளோம். பாதிக்கப்படும் ஆண்கள் எங்களை அணுகினால் உடனடியாக சட்டரீதியான உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent