இந்த வலைப்பதிவில் தேடு

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் !!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020



இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.

சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் :

பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத் தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.

கட்டணம்:

பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் & அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை :

அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த :

உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002

என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை :

பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.

அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.
அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள் :

விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படி பெறுவது ?

அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.

இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:

சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.

பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.

கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

# மேலும் #விவரங்களுக்கு:

உதவி  இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் 
http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும்.

இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent