இந்த வலைப்பதிவில் தேடு

அடேங்கப்பா! சத்தம் இல்லாமல் 'எகிறியது' தங்கம் விலை

வியாழன், 16 ஏப்ரல், 2020




வரும், 26ம் தேதி, அக் ஷய திருதியை அன்று, தங்கம் விற்பனை கிடையாது என்றாலும், அதன் விலை, சாமானியர்கள் வாங்க முடியாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை, 4,505 ரூபாய்!

அக் ஷய திருதியை தினத்தில், தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை,பலரிடமும் உள்ளது. நகை கடைகளும், வாடிக்கையாளர்களை கவர, 'குறைந்த செய்கூலி; தங்க நாணயம் இலவசம்' என, பலசலுகைகளை வழங்கும். இதனால், அக் ஷய திருதியை அன்று, பலரும் தங்கம் வாங்குவதால், அன்றைய தினம், வழக்கத்தை விட, அதிக தங்கம் விற்பனையாகும்.





26ல் அக் ஷய திருதியை:

தமிழகத்தில், 2019ல், அக் ஷய திருதியை, மே, 7ம் தேதி வந்தது. அதிகாலை முதல், பலரும் நகைகளை வாங்க, கடைகளுக்கு படையெடுத்ததால், பழைய மற்றும் புதியது என, 30 ஆயிரம் கிலோவுக்கு மேல் தங்கம் விற்பனையானது. நடப்பாண்டில், அக் ஷய திருதியை, வரும், 26ம் தேதி வருகிறது. இதனால், அன்றைய தினம் தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக, முந்தைய ஆண்டில் இருந்து, நகை சேமிப்பு திட்டங்களில், பணம் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க, மார்ச், 25 முதல் இம்மாதம், 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மே, 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், நகை கடைகள் மூடப்பட்டு உள்ளதால், அக் ஷய திருதியைக்கு தங்கம் விற்பனை கிடையாது.





அடேங்கப்பா!

இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அக் ஷய திருதியைக்கு, தங்கம் விற்பனை அதிகம் இருக்கும். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு அமலில் இருப்பதால், அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், மே, 3ம் தேதி வரை, தங்க நகை கடைகள் திறக்கப்படாது.

ஊரடங்கு அமலுக்கு முன், கிராம் தங்கம், 3,952 ரூபாயாகவும்; சவரன், 31 ஆயிரத்து, 616 ரூபாயாகவும் இருந்தது. தற்போது, கிராம், 4,505 ரூபாயாகவும்; சவரன், 36 ஆயிரத்து, 40 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. சவரனுக்கு மட்டும், 4,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. சர்வதேச நிலவரங்களால், இனி, தங்கம் விலை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent