வறியவரும் எளியவரும் கல்வியறிவு பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் இன்றைக்கு மாணவர் சேர்க்கை இல்லாமல் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம், அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் .
‘‘மக்களாட்சி யுகம் தொடங்கிய பின்னர் கல்வி கொடுப்பது அரசின் முதன்மையான கடமையானது. உலகின் பல நாடுகளிலும் கல்வி கொடுப்பது வரி வசூலிக்கும் அரசாங்கத்தின் கடமை என்று சட்டங்கள் இயற்றப்பட்டன. இக்கடமையை உணர்ந்த காமராஜர் தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் அரசுப் பள்ளிகளைத் திறந்து எல்லோருக்கும் கல்வி கிடைக்க வழிசெய்தார். தமிழ்நாட்டில் தற்போதுள்ள மக்களில் பத்தில் ஒன்பது பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாக இருப்பார்கள்.
ஒரு தனியார் பள்ளி திறக்கப்பட்டதால் அப்பள்ளியைச் சுற்றியுள்ள பத்துப்பதினைந்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில்மாணவர் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழைக் குழந்தைகள் 25 விழுக்காட்டினர் ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் சேர்க்கவேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு லட்சம் குறைகிறது.’’ என்று தனியார் பள்ளிகளின் பெருக்கத்தால் அரசுப் பள்ளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறார்.
அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் உண்டாகும் சிக்கல்கள் பற்றி விவரிக்கையில், ‘‘அரசுப் பள்ளிகளை மூடும் நிலை உருவாவதால் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணிமாறுதல், பணி இழப்பு போன்ற ஆபத்துகள் ஏற்படப்போகின்றன. தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை யில்லாத பதினைந்து லட்சம் இளைஞர்களின் அரசுப் பள்ளி ஆசிரியர் கனவும் வெறும் கனவாகப் போகும் நிலையும் உள்ளது.
பெரும்பாலானஅரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குழந்தைகள்கூட தனியார் பள்ளிகளில் படிக்கும் நிலைதான் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளைக் காப்பதற்கு என்ன வழி இருக்கிறது? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழத்தான் செய்யும். முதற்படியாக, ஆட்சிப் பதவியில் உள்ளவர்கள், அரசு ஊதியம் பெறுவோர் அனைவரும் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கவேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் தற்காலிகமாகவேனும் அரசுப் பள்ளிகளைக் காக்க ஒரு வழி ஏற்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் நாடு தழுவிய அளவில் இணைந்து இதற்கான முயற்சிகளை, போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். மேலும் தனியார் பள்ளி வாகனங்கள் மூலம் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனர்.
தனியார் பள்ளி வாகன விபத்துகளில் குழந்தைகள் உயிரிழப்பது அடிக்கடி நடக்கிறது. மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர், நடுநிலைப் பள்ளிக்கு மூன்று கிலோமீட்டர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு ஐந்து கிலோமீட்டர் என்ற வகையில் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கைப் பகுதிக்கான எல்லைகளை தமிழக அரசு வரையறை செய்யவேண்டும்.
குழந்தைகளுக்கு ஒரு கிலோமீட்டர் எல்லைக்குள் அரசுப் பள்ளி இருக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ளது. ஆனால், ஒரு பள்ளிக்குப் பத்துக் குழந்தைகளே உள்ள அப்பள்ளிகளை எப்படி நடத்துவது? கல்வித்துறை நிர்வாகத்தினர், ஆய்வாளர், ஆசிரியர், சத்துணவுப் பணியாளர்கள் போன்ற பலருடைய உழைப்பு ஒரு பள்ளியில் வெறும் பத்துக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப் பயன்படுவது சரியல்ல.’’ என்கிறார் மூர்த்தி.
அரசுப் பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவரித்த அவர், ‘‘பத்து மாணவர் இருந்தாலும் பள்ளி நடக்கவேண்டும் என்பதைக்காட்டிலும் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் இருந்தால் தானே குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கும்? இன்றைக்குத் தமிழ்நாட்டில் 25 மாணவர்கள் கூட இல்லாததொடக்கப் பள்ளிகள் சுமார் 15 ஆயிரம் பள்ளிகள் உள்ளன.
அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை 60 மாணவர்கள் படித்தாலும் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படும் நிலையில் குழந்தைகள் தரமான கல்வியைப் பெற வழியின்றி உள்ளனர்.கட்டாயமாக வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு முழுநேர ஆசிரியர்கள், முழுநேரத் துப்புரவுப் பணியாளர் இருக்கவேண்டும் என்பதை ஒரு அரசுப் பள்ளியின் அடிப்படைத் தரமாகக் கல்வி உரிமைச் சட்டத் திருத்தம் மூலம் வரையறுக்க வேண்டும்.
ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு பள்ளி என்ற கல்வி உரிமைச் சட்ட விதிமுறையை மூன்று கிலோமீட்டருக்குள் அல்லது ஒரு சிற்றூராட்சி எல்லைக்குள் ஒரு தொடக்க, நடுநிலைப் பள்ளி என்று மாற்றி அமைக்கவேண்டும். ஒரு கிலோமீட்டர் எல்லைக்கு வெளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு அரசின் பொறுப்பில் வாகன வசதி என்பதை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் உடனடியாக இப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்யவில்லை என்றாலும் முன்மாதிரியாகச் சில ஒன்றியங்களை, கிராமங்களைத் தேர்வு செய்து இம்மாற்றங்களைச் செய்ய தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும். தரமான கல்வி அரசுப் பள்ளிகள் மூலம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டால் எல்லாமக்களும் அரசுப் பள்ளிகளை நோக்கி வருவார்கள். 1966 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட டாக்டர் கோத்தாரி தலைமையிலான கல்விக் குழு கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவது ஜனநாயக விரோதம் என்று கூறியது.
கல்வியில் சமமான வாய்ப்புகளைக் கிடைக்கச்செய்ய பொதுப்பள்ளி, அருகமைபள்ளி முறைமைகளை உருவாக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் இக்கல்வி முறையை நமது நாட்டிலும் நடைமுறையாக்குவது அவசியமானது’’ என்று சு.மூர்த்தி திட்டவட்டமாகக் கூறுகிறார்.
- தோ.திருத்துவராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக