ரத்தம் கொடுத்ததற்காகப் பணம்பெற்றுக் கொண்டதைப் போல தோற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதால் இந்தத் தொகையை அந்தப் பிறந்த குழந்தையின் கைகளிலே கொடுத்து விட உள்ளேன் என்கிறார் காவலர் சையது அபுதாஹிர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர். ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் தன் கணவருடன் நடந்துவந்துள்ளார். இதைப் பார்த்த அபுதாஹிர் அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணிண் கணவரையும் அழைத்துப் பேசியுள்ளார்.
`என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில் தேவையான ரத்தம் இல்லை என்பதால் இன்று பிரசவம் பார்க்க முடியாது' என மருத்துவர்கள் கூறிவிட்டனர் என்று கூறியிருக்கிறார் கர்ப்பிணிப் பெண்ணின் கணவர். இதைக் கேட்ட காவலர் சையது அபுதாஹிர், தான் ரத்தம் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து ரத்ததானமும் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காவலர் அபுதாஹிரிடம் பேசினோம். ``நான் இரண்டாம் நிலை காவலராக மணப்பாறையில் பணியாற்றி வருகிறேன்.ஊரடங்கு சமயத்தில் மணப்பாறை பகுதியில் எனக்கு பணி வழங்கப்பட்டு இருந்தது.பணியில் இருந்த பொழுது சாலையின் வழியே கணவன் மனைவி இருவரும் சோகமாக நடந்து சென்று கொண்டிருந்த காட்சியை பார்த்தேன். பின்னர் அவர்கள் இருவரையும் அழைத்து பேசினேன்.
அப்பொழுது பெண்ணிண் கணவர் ஏழுமலை, தன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும் அதனால் மருத்துவமனைக்கு தன் மனைவியை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்றதாகவும் கூறினார். ஆனால், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து தான் பிரசவம் பார்க்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் ரத்தம் தேவைப்படும்; தற்போதைய ஊரடங்கு சூழலில் இரத்தம் கிடைப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். ஆகவே ஒரு வாரத்துக்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆகையால் வேறு வழியில்லாமல் வீட்டுக்கு திரும்பி செல்ல வாகன ஏற்பாடு செய்ய முயற்சித்தோம். ஆனால் ஊரடங்கு சமயத்தில் வாகனம் கிடைப்பதும் சிரமமாக இருந்ததால் நடந்தே வீட்டுக்கு செல்வதாக அவர் என்னிடம் கூறினர்.
பின்னர் நான் அவர்களிடம் அவரின் ஊரைச் சேர்ந்தவர்களின் தொலைபேசி எண்ணை பெற்று கொண்டு தொடர்பு கொண்டு பேசினேன் பின்னர் வாகன வசதியையும் ஏற்படுத்தி கொடுத்தேன்.
அவர்கள் இது குறித்து மேலும் என்னிடம் பேசும் பொழுது இரத்தம் இன்றே கிடைத்துவிட்டால் கூட இன்றைக்கே அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்து விடும் என கூறினார். பின்னர் நான் அவர்களிடம் என்ன வகையான ரத்தம் தேவைபடுகிறது என விசாரித்தேன்.அதற்கு அவர்கள் "O+ வகை ரத்தம் தேவைப்படுவதாக என்னிடம் கூறினார்கள்.
எனக்கும் "O+ வகை" ரத்தம் தான் என்பதால் அவர்களிடம் நானே அறுவை சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனைக்கு சென்று செய்ய சொல்லுங்கள் நான் இன்றே ரத்தம் கொடுக்க தயாராக உள்ளேன் என கூறினேன்.
மாலை 6 மணிக்கு பணி முடிந்த பின்னர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்தம் வழங்கினேன். பின்னர் சுலோச்சனாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தையும் பிறந்தது.இது மாதிரியான சமயங்களில் மனிதநேயத்தோடு இந்த பணியை செய்தது எனக்கு ஆத்மதிருப்தியை ஏற்படுத்தியது.யாராக இருந்தாலும் அவர்களிடம் மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
இந்த உதவியை செய்ததற்காக திருச்சி SP ஜியாவுல் ஹக் அவர்கள் என்னை அழைத்து பாராட்டினார்கள் அத்தோடு எனக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கினர். அதே போல DGP அவர்களும் என்னை அழைத்து பாராட்டி 10,000 ரூபாய் வழங்கினார்.இந்த தொகையை சம்பந்தபட்ட ஏழுமலை சுலோச்சானா தம்பதியினருக்கே நான் வழங்க உள்ளேன்.
நான் ரத்தம் கொடுத்தது ஒரு மனிதநேய பணி அதற்கு என்னுடைய மேல் அதிகாரிகள் என்னை பாராட்டி இந்த தொகையை வழங்கியது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இந்த மனிதநேயபணியை செய்ததற்காக இந்த தொகையை நான் வைத்திருப்பது ரத்தம் கொடுத்தற்காக பணம் பெற்று கொண்டதை போல தோற்றத்தை ஏற்படுத்தி விட கூடாது என்பதால் இந்த தொகையை அந்த பிறந்த குழந்தையின் கைகளிலே கொடுத்து விட உள்ளேன்.மாநிலங்களவை உறுப்பினர் வைகோ அவர்களும் இந்த செய்தியை படித்து விட்டு என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டினார்’’ என மன மகிழ்வோடு தெரிவித்தார்.
அடுத்ததாக சுலோச்சனாவின் கணவர் ஏழுமலையிடம் இது குறித்து பேசினோம். ``காவல்துறை உங்களின் நண்பர் என சொல்லி கேட்டுள்ளோம் ஆனால் என் வாழ்க்கையில் அதை அன்றைய தினம் உணர்ந்தேன்.
காவலர்கள் வெயிலிலும் மழையிலும் சிரமம் பார்க்காமல் மக்களுக்காக பணி செய்து கொண்டுள்ளனர்.காவலர் அபுதாஹிர் அவரின் பணிசுமையிலும் எந்த சிரமமும் பார்க்காமல் எங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்து அவரே நேரடியாக வந்து ரத்தம் வழங்கியதை என்னால் மறக்க முடியாது.
இது மகிழ்வான சம்பவமாக என்றும் நினைவில் இருக்கும். மருத்துவர்கள் ரத்தம் இல்லை என கூறிய பின்னர் ஒரு வாரத்துக்கு பின்னால் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்றனர். அப்பொழுது அந்த காவலர் அபுதாஹிர் தான் எங்களுக்கு உடனடியாக உதவி செய்து அன்றே அறுவை சிகிச்சை நடைபெற உதவிபுரிந்தார். அவருக்கு இதன் மூலமாக மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று நெகிழ்ந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக