Posted By Pallikalvi Tn
மத்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்யவில்லை எனில் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் வெகுண்டெழுந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு பொதுச்செயலாளர் என். ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு காரணமாக விளிம்புநிலை மக்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர். கோடிக்கணக்கான தினக்கூலிகள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சம்பள வெட்டு, பகுதி வேலை இழப்பு, வேலை இழப்பு ஆகிய கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
சிறு குறு நடுத்தர தொழில்கள் கடுமையான சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்கவும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுடைய வேலையை பாதுகாக்கவும் மத்திய அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது..
இந்த நிலையை எதிர்கொள்ள நாட்டின் செல்வாதாரங்களை சுரண்டி கொடுத்துள்ள கார்ப்பரேட்டுகளிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்க வேண்டும். அதை விடுத்து மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 18 மாதகாலத்திற்கு பஞ்சப்படி வெட்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
ஏற்கனவே கடுமையான பொருளாதார சூழலை எதிர்கொண்டு அரசு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு அவர்களுக்குரிய பஞ்சபடியை மறுக்கும் மத்திய அரசின் அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறோம். அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக