இந்த வலைப்பதிவில் தேடு

Science Facts : ஓட்ஸ் கஞ்சியை பற்றிய உண்மை

திங்கள், 21 ஆகஸ்ட், 2023



ஓட்ஸ் என்ற பெயருடைய தானியம் இன்றைய கால கட்டத்தில் ரொம்பவே பிரபலம். அரிசி கோதுமைக்கு அடுத்தபடியாக , ஓட்ஸுக்கும் , நம் வீட்டு சமையல் அறைகளில் ஒரு சிறப்பான இடம் உண்டு.  ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம்.. மேலும் நெடு நேரம் வரை பசி தாக்கு பிடிக்கவல்லது..



சர்க்கரை நோயால் வருந்துபவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த ஓட்ஸ்…   ஓட்ஸ் நம் இருதயத்துக்கு மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கவல்லது.சிறிது காலம் முன்பு வரை மேகி நூடுல்ஸ் எவ்வளவு பிரபலமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே… 

அதன் வழியிலே , உடனடி ஓட்ஸ் இப்பொழுது ரொம்பவே பிரபலம். இவ்வளவு தூரம் மக்கள் மனதில் ஒரு பிரதான இடம் பெற்றிருக்கும் ஓட்ஸ்  தானியம் நிஜமாகவே நல்லது தானா??


காலை நேரத்தில் ஓட்ஸ்  கஞ்சியை உணவாக எடுத்து கொள்பவர்கள் , நாள் முழுக்க சக்தியோடு விளங்குவார்கள்! ஏனெனில், அது கொஞ்சம் கொஞ்சமாக  நாள் முழுக்க , உடம்புக்கு சக்தியை வெளியிடும் வல்லமை மிக்கது! ஒட்ஸில் வைட்டமின்கள் , மினரல்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதனால் , ஓட்ஸினால் செய்யப்படும் கஞ்சி மிகுந்த சத்தான  உணவாகவே  மதிப்பிடப்படுகிறது! 

ஆனால், யாருக்கும் அவ்வளவாக தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், ஓட்ஸ்   பைட்டிக் அமிலம் (Phytic Acid) நிறைந்தது. இந்த  பைட்டிக் அமிலத்தை  , நம் இரைப்பையால்  ஜீரணிக்க இயலாது! இந்த பைட்டிக் அமிலம் நம் இரைப்பையில் ,சும்மா இருக்காமல் , இரும்பு , கால்சியம்  , சின்க் , மெக்னீசியம்  போன்றவற்றை தன்னோடு சேர்த்து கொண்டு , நம் உடம்புக்கு தேவையான சத்துக்கள் எதையும் உறிஞ்ச விடாது செய்து விடும்.



இந்த பைட்டிக் அமிலத்தை   மட்டும் நீக்கி விட்டால் , ஓட்ஸ் கஞ்சி  நிஜமாகவே சத்தான உணவு தான்! அது எப்படி என்று அடுத்து பார்க்கலாம். ஓட்ஸ் கஞ்சி  காலையில் செய்ய போகிறீர்கள் என்றால் , முதல் நாள் இரவே , ஓட்ஸை தண்ணீரில் ஊற போட்டு விட வேண்டும். அதிலே கொஞ்சம் தயிர் அல்லது மோரை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் , பாப்பரை மாவு  (Buck Wheat Powder )


பாப்பரை பொடி




அல்லது முழு கோதுமை மாவு கொஞ்சம் இதிலே ஊற போட வேண்டும். இந்த பாப்பரை யில் பைடேட் நொதி (Phytate Enzyme)அதிகமாக இருப்பதனால், அது ஓட்ஸில் உள்ள பைட்டிக் அமிலத்தை உடைத்து , ஒன்றும் இல்லாது  செய்து விடும்!மறு நாள் காலையில் , மேலே குறிப்பிடப்பட்ட வேதியல் நிகழ்வுகளால் , ஊற போட்ட ஓட்ஸ் , கஞ்சி கிண்டப்படும் போது , அதி விரைவாக வேகவும் செய்யும் , அதே நேரத்தில் , நம் இரைப்பையில் எளிதில் முழுமையாக ஜீரணிக்கப்படும் உணவாக மாறி இருக்கும்! ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கப் பெறும்  என்பதில் எந்த ஐயமும் இல்லை !



சர்க்கரை நோயால் அவதி படுபவர்களுக்கு ஓட்ஸ் கஞ்சி , சிறந்த உணவு என ஏற்கனவே அறிந்தோம்.. இனி சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த வகை ஓட்ஸ் நல்லது என்று கண்டு அறிவோம்! முன்னெல்லாம் , மாவு சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளையே சாப்பிட கூடாது என்று சர்க்கரை நோயாளிகள் அறிவுறுத்தப்பட்டனர்! 

ஆனால் , இன்றைய கதையோ வேறு! ஓரளவு , மாவு சத்து நிறைந்த ஆகாரங்களை  எடுத்து கொண்டால் தப்பில்லை என்ற நிலையில் இருக்கிறது ! சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic index )  என்று ஒன்று இருக்கிறது! அதில் , எந்தெந்த உணவு உட்கொண்டால் , எவ்வளவு வேகமாக , இரத்தத்தில் , சர்க்கரையின் அளவு உயரும் என்ற விவரங்கள் நிறைந்து இருக்கும். 



அதிலே , ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள், குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடு(Low Glycemic Index ) கொண்டது. இருந்தும் , எல்லா வகையான ஓட்ஸும் நல்லது தானா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் பதில் அளிப்பேன் !எந்த  வகையான ஓட்ஸ்  நல்லது என்று அடுத்து பார்க்கலாம் !


ஓட்ஸில் நிறைய வகைகள் இருக்கின்றன…
அவற்றில் சில,

1)எஃகு வெட்டு ஓட்ஸ்(Steel  cut  Oats )

2)உருண்ட ஓட்ஸ் (Rolled  Oats )

3)உடனடி ஓட்ஸ் (Instant oats )

இதில் எந்த வகை தேர்ந்து எடுக்கிறோம் என்பதை பொறுத்து , சர்க்கரை உயர்த்தல் குறியீடு 42 முதல் 66 வரை வேறுபடும்!


எந்த ஓட்ஸ் நம் உடலுக்கு நல்லது என்பதை தீர்மானம் செய்வதற்கு முன்னே , எந்த வகை , இயற்கையோடு இயற்கையாய் ஒத்து இருக்கிறது என்பதை கண்டு கொள்ள வேண்டியது முக்கியம். பதப்படுத்தப்பட்ட உடனடி ஓட்ஸை காட்டிலும் , உருண்ட  ஓட்ஸ் நல்லது! உருண்ட ஓட்ஸை காட்டிலும் எஃகு வெட்டு ஓட்ஸ் மிகவும் நல்லது! ஆக, இப்பொழுது எந்த வகையான ஓட்ஸ் நல்லது என்பது தெளிவாக விளங்கி இருக்கும்!



ஓட்ஸை  தேர்ந்தெடுக்கும் போது எஃகு வெட்டு ஓட்ஸையே தேர்ந்தெடுங்கள்! ஏனெனில் , இதற்கு , சர்க்கரை உயர்த்தல் குறியீடு , மிக மிக கம்மி! இது மிகுந்த நார்ச்சத்து உடையது! உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது! உடனடி ஓட்ஸுகளுக்கு இன்றே கையசைத்து விடை கொடுத்து விடுங்கள்.



அதிலே ருசிக்காக சேர்க்கப்படும் , உப்பு அல்லது சர்க்கரையால், உங்கள் உடம்புக்கு மேலும் , மேலும் துன்பமே தவிர இன்பம் கிடையாது!  ஓட்ஸ் பதப்படுத்தப்பட்டு , செயற்கையாக , நறுமணச்சுவை  சேர்க்கப்படும் போது, அதிலே இருக்க வேண்டிய  நார்ச்சத்தும் , வேறு நல்ல சத்துகளும், இல்லாது போக கூடும் என்பது தான் , நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை ! 

எஃகு வெட்டு ஓட்ஸும் , உருண்ட ஓட்ஸும்  ஓரளவு , இயற்கையோடு ஒத்து இருப்பதால் , எந்த பயமும் இன்றி உட்கொள்ளலாம். என்ன ஒன்று , உடனடி ஓட்ஸ் , நிமிடங்களில் தயாரித்து விடலாம்! மற்ற வகைகள் , 15 இல் இருந்து 30 நிமிடங்களில் தயாரித்து விடலாம்! 



திரும்பவும் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்! நீங்கள் உணவு தயாரிக்க தேர்ந்தெடுத்த ஓட்ஸை , முந்தைய நாள் இரவே , சிறிதளவு தயிர் , மற்றும் பாப்பரை பொடியுடன் ஊறப் போட்டு விட மறக்காதீர்கள்! அடுத்த நாள் , ஊறிய ஓட்ஸை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டு , உண்ணப்படும்  போது ,நம் உடம்புக்கு தேவையான , முக்கியமான சத்துக்களான , இரும்பு சத்து , கால்சிய சத்து ஆகியவை உணவிலிருந்து முழுமையாக , நம் உடம்புக்கு உறிஞ்சப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent