இந்த வலைப்பதிவில் தேடு

தேர்வுக்கு அவசரம் என்ன? - தமிழ் இந்து தலையங்கம்

வெள்ளி, 1 மே, 2020




பள்ளி, கல்லூரிகளைக் கடைசியாக யோசிக்கலாம்

ஊரடங்கு முடிந்தவுடன் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அன்றாட ஒழுங்கு குலைக்கப்பட்ட இந்நாட்களில், ஒரு பொதுத் தேர்வை நடத்துவதில் அவசரம் ஏன்?


கரோனா ஊரடங்குக்குப் பிந்தைய மீட்சி நாட்களில் கடைசி வரிசையில் சிந்திக்க வேண்டிய பள்ளி, கல்லூரிகள் இயக்கத்தை முன்கூட்டி நடத்த அரசு முற்படுவதே வினோதமாக இருக்கிறது.



தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் ஒரு கோடி. தமிழக மக்கள்தொகையில் ஏறக்குறைய எட்டில் ஒரு பங்கினரான மாணவர்களைக் கல்வி நிலையங்களை நோக்கி நகர்த்தும் எந்த நடவடிக்கையும் ஒட்டுமொத்த இயக்கத்திலும் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிடும். ஏனெனில், ஒரே நேரத்தில் சென்றடைய வேண்டிய அவர்களுடைய புறப்பாடு, வீடுகளின் சமையலறைகளிலிருந்து சாலைகள் வரை பரபரப்பை உண்டாக்குவதோடு, நெரிசலையும் உண்டாக்கும். 


நெரிசல் மிக்க நம்முடைய கல்வி நிலையங்களில் இதுவரையில் அரசு வலியுறுத்திவரும் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கடும் சவாலாக இருக்கும், ஒழுங்கை அது குலைக்கும். கரோனாவின் இலக்குக்கு ஆளாவதில் இளம்வயதினர் பின்வரிசையில் இருக்கலாம். 

ஆனால், அவர்கள் கிருமி கடத்துநர்களாகிவிடும் பெரும் அபாயம் இருப்பதை அரசு புறந்தள்ளக் கூடாது. இத்தகு நிலையில், குறைந்தது ஜூன் 17 வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என்ற ஒடிஷா அரசின் முடிவு தெளிவானதாகத் தெரிகிறது.

அப்படியென்றால், தேர்வுகளை என்ன செய்வது? பள்ளி இறுதித் தேர்வுதான் முக்கியமானது. அதை ஏற்கெனவே தமிழகம் நடத்தி முடித்துவிட்டது. பதினோராம் வகுப்பைப் பொறுத்தமட்டில் ஒரே ஒரு தேர்வு மிச்சம் இருக்கிறது; அதைப் பன்னிரண்டாம் வகுப்பின் காலாண்டுத் தருணத்தில் சேர்த்துக்கூட நடத்திக்கொள்ளலாம். 

பத்தாம் வகுப்புத் தேர்வுகளைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டில் 95% மாணவர்களுக்குத் தேர்ச்சி அளித்திருக்கிறது தமிழக அரசு. இந்த வருடம் தேர்வையே ரத்துசெய்துவிட்டு, 100% தேர்ச்சி அளிப்பதில் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள் கல்வியாளர்கள். அரசு விரும்பாவிடில், இன்னும் இரு மாதங்கள் கழித்துக்கூடத் தேர்வை நடத்தட்டும். 


எப்படியும் அடுத்த இரு மாதங்களில் தேர்வு நடத்துவதை யோசிப்பது தேர்வுக்கான மனநிலையின் முக்கியத்துவத்தைப் புறந்தள்ளுவது; அதை அரசு செய்யக் கூடாது. இப்போதைக்கு இணைய வழிக் கல்வியை அரசு தொடரட்டும். அதற்கு வாய்ப்பற்றோருக்கு அந்த வாய்ப்பை உருவாக்கிடும் திட்டங்களை யோசிக்கட்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent