இந்த வலைப்பதிவில் தேடு

தலைவலியை சட்டென விரட்ட இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்..

வியாழன், 4 பிப்ரவரி, 2021

 


🔊தலைவலியை சட்டென விரட்ட இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்..*




நல்ல தூக்கம் நமது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது. தூக்கம் போதிய அளவில் இல்லையென்றால் தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இதுமட்டுமல்லாமல் அதிக வேலை பளு, மன அழுத்தம், காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் உங்களுக்கு அதிக தலைவலி ஏற்படும். அந்த சமயத்தில் சூடான ஒரு கப் டீயோ அல்லது காஃபியோ உங்களுக்கு இதமான ஒரு உணர்வை தரும். 


ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் இந்த தலைவலியை குறைக்கலாம். அப்படி தலைவலிக்கான வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை இங்கே காண்போம்.


இஞ்சி:




தலைவலிக்கு இயற்கை தந்த ஒரு வரப்பிரசாதம் இஞ்சி என்று சொல்லலாம். இது உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க உதவும். தலையில் உள்ள ரத்த நாளங்களின் வீக்கத்தை குறைத்து தலைவலியை கட்டுப்படுத்த இஞ்சி உதவுகிறது. செரிமானத்துக்கு இது உதவுவதால், ஒற்றை தலைவலியின் போது ஏற்படும் குமட்டலை சரிசெய்யவும் உதவும். இஞ்சி தேநீர் குடித்தால் உடலுக்கு நல்லது. அப்படி இல்லையென்றால் இஞ்சி தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் பதத்தில் நெற்றியில் தேய்த்துக் கொள்ளுங்கள். வலி உடனடியாக பறந்து விடும்.



இலவங்கப்பட்டை:




இஞ்சியை போலவே இலவங்கப்பட்டையும் உங்கள் தலைவலியை நொடிப் பொழுதில் காணாமல் போக செய்ய பயன்படுகிறது. இலவங்கப்பட்டையை அரைத்து அதில் தண்ணீர் கலந்து பேஸ்ட் பதத்திற்கு தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை நெற்றியில் தேய்த்து சுமார் 30 நிமிடங்களுக்கு ஓய்வெடுங்கள். அதன்பிறகு மிதமான சூடு உள்ள தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் தலைவலி சில நிமிடங்களில் குறைந்து விடும்.


மிதமான அசைவுகள்:


உங்கள் கழுத்தை மெதுவாக அசைத்து உடற்பயிற்சி செய்வது போல் அசைவு கொடுத்தால் தலைவலியின் தீவிரத்தை குறைக்க முடியும். உங்கள் தலையை மேல் மற்றும் கீழ்நோக்கி, இடது மற்றும் வலப்புறமாக நகர்த்தி சிறிய அசைவுகளை கொடுக்கலாம். 



உங்கள் கழுத்தின் பின்பகுதியில் ஒரு ஐஸ்பேக் வைத்துக் கொள்வதன் மூலம் ஒற்றை தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதே போல் உங்கள் கால்களை சூடான நீரில் வைத்துக் கொண்டாலும் தலைவலியில் இருந்து விடுபடலாம். தலைவலி அதிகமாக இருந்தால், அந்த சூடான நீரில் சிறிது கடுகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.



கிராம்பு:


இதன் வலி நிவாரண பண்புகள் உங்கள் தலைவலியை குறைக்க உதவுகிறது. சில கிராம்புகளை நசுக்கி அதனை உங்கள் கைக்குட்டையில் வைத்துக் கொள்ளுங்கள். தலைவலி அதிகமாக இருக்கும் சமயங்களில் எல்லாம் அதன் வாசனையை நுகர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் தலைவலி படிப்படியாக குறையும்.


துளசி:



தலைவலிக்கு இயற்கையான மருந்தாக துளசி இருக்கிறது. இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கொதிக்கும் நீரில் துளசி போட்டு சில நிமிடங்களுக்கு பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும். அதனை குடித்தால் தலைவலி குறையும். இல்லையென்றால் கொதிக்கும் நீரில் துளசி சேர்த்து அந்த நீராவியை நுகர்ந்து பார்க்கலாம். 


இவை மட்டும் இல்லாமல் தலைவலி அதிகமாக இருக்கும் சமயங்களில் உங்களை சுற்றி பிரகாசமாக உள்ள விளக்குகளை அணைத்து விடுங்கள். தலைமுடியை இறுக்கமாக பின்னாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். செல்போன், கணினி போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent