10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள், கொடைக்கானலில் உள்ள தனது விடுதிகளில் இலவசமாக தங்கிக்கொள்ளலாம் என கேரளாவைச் சேரந்த தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
சுதீஷ் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படித்த அவர், கொடைக்கானல் தங்கும் விடுதி ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தனது குடும்பத்தாருடன் அங்கு வசித்து வருகிறார்.
இவர் பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு குடும்பத்தினருடன் கொடைக்கானல் சுற்றுலா செல்ல அனைத்து செலவுகளையும் ஏற்பதாக அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் தங்களது மன அழுத்தம், கவலை ஆகியவற்றைப் போக்க, கொடைக்கானலில் உள்ள அவரது இருப்பிடங்களில் இலவசமாக தங்கிக்கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களது குடும்பத்தாருடன் வந்து சுதிஷின் தங்குமிடங்களில் இரண்டு நாட்கள் இலவசமாக தங்கிக்கொள்ளலாம். இதனை சுதீஷ் தனது சமூக வலைதளபக்கத்தின் மூலம் அறிவித்தவுடன், அவரது தொலைபேசிக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளது. தன்னால் முடிந்த அளவு இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய நினைத்ததன் விளைவாக இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
<
/p>
இதுகுறித்து மேற்கொண்டு பேசிய அவர், ''கொடைக்கானல் மிகவும் அமைதியானது. இங்கு வந்தால் நம் மன அழுத்தங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும். தற்போது மாணவர்களுக்கு அதிகமான அழுத்தங்கள் உள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவது ஒரு குடும்பத்தின் கௌரவமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய மன அழுத்தத்தில் இருந்து சில நாட்கள் தள்ளியிருந்தால், அவை அவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கும். கல்வி என்பது நம் வெற்றியையும், தோல்வியையும் தீர்மானிக்காது என்பது என் கருத்து.
சில மாணவர்கள் என்னிடம் தனியாகவோ, அல்லது நண்பர்களுடனோ வரலாமா என என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் பதின்வயதினர் என்பதால் பெற்றோர்கள் வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கிறோம். இரண்டு சிறுவர்கள் என்னிடம், தாங்கள் எவ்வளவு மனக் கவலையில் இருக்கிறோம் என்று கூறினார்கள். நான் அவர்களிடம், இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வி என்பது பூமி முடிவுக்கு வருவதைப் போன்றது அல்ல என்று ஆறுதல் கூறினேன்'' என்றார். இந்த சலுகை இந்த மாதம் இறுதிவரை மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக