"ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியை, ஆசிரியை மதமாற்றம் செய்ய முயன்றதாக தெரிவித்த புகாரில் உண்மைத் தன்மை இல்லை" என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் கூறியுள்ளார்.
திருப்பூர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான பெண் குழந்தைகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி பள்ளிக்கு செல்லும்போது தினமும் நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. பள்ளியில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியை திலகவதி, அந்த மாணவியை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக கூறி, மாணவியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
புகாரின் பேரில், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் கல்வித் துறை அதிகாரிகள் 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் வினீத்திடம் அளித்தார்.
இது தொடர்பாக திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வினீத் கூறும்போது, "மாநகராட்சி பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில், முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழுவின் விசாரணையில் மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகாரில் உண்மைத் தன்மை இல்லை என்பது தெரியவந்தது. மேலும், பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக போலீஸாருக்கும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மதமாற்ற முயற்சிகள் நடக்கவில்லை. ஏதேனும் பள்ளிகளில் இதுபோன்ற புகார்கள் இருந்தால் மாணவ, மாணவிகள் 1098 என்ற எண்ணுக்கு புகார் அனுப்பலாம்" என்று ஆட்சியர் வினீத் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக