தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் உறவினர் வீடுகளுக்கும் மற்றும் சுற்றுலாவுக்கும் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ஹஸ்புல் ஆகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி பொதுத்தேர்வுகள் முடிந்து கடந்த மே மாதம் இறுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதேபோல, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறையை கொண்டாடும் வகையில் மாணவ, மாணவிகள் சொந்த ஊர்களுக்கும், தங்களது உறவினர்கள் வீடுகளும் படையெடுத்தனர். அவர்கள் அங்கு கோடைவிடுமுறையை உற்சாகமாக கொண்டாடினர். பலர் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட கோடைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்றனர்.
கோடை விடுமுறை முடிந்து வருகிற திங்கட்கிழமை (13ம் தேதி) முதல் 1 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உறவினர்கள் வீடுகளுக்கும், சுற்றுலாவுக்கும் சென்றவர்கள் கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக பஸ்களிலும், ரயில்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. பள்ளிகள் திறக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. கடைசி நேரத்தில் ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் எப்படியாவது செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்த காட்சியை காணமுடிந்தது. ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் கடைசியில் பஸ்களை நாடினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டதாக பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். எவ்வளவு கட்டணம் உயர்த்தினாலும் மாணவர்களின் கல்வி தான் முக்கியம் என்ற எண்ணத்தில் கேட்ட கட்டணத்தை கொடுத்து பஸ்களில் பலர் பயணத்தை தொடர்ந்தனர்.
அதே நேரத்தில் இன்றும், நாளையும் தென் மாவட்டங்களுக்கான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு பெட்டியில் டிக்கெட் இல்லாத நிலை இருந்து வருகிறது. ஒவ்வொரு ரயிலிலும் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். கடைசி நேரத்தில் எப்படியாவது ரயில்களில் இடம் கிடைத்துவிடும் என்ற ஆர்வத்தில் காத்திருந்து வருகின்றனர். அதே நேரத்தில் சென்னைக்கு வரும் ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு ரயில்களிலும் காத்திருப்பு பட்டியல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக