ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்தபோதும், பொது தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைந்தது குறித்து பட்டியல் தயாரிக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் இந்தாண்டு மார்ச்சில் நடந்தன. இந்த தேர்வின் முடிவுகள், இந்த மாதம், 20, 27ம் தேதிகளில் வெளியிடப்பட்டன.
இடைநிற்றல்
தேர்வுத்துறை வெளியிட்ட புள்ளி விபரப்படி, அரசு பள்ளிகளை பின்னுக்கு தள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களும், தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதனால், அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு முன்னேறாமல் இடைநிற்றலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளுக்காக, தமிழக அரசின் பட்ஜெட்டில், ஆண்டுக்கு 35 ஆயிரம்கோடி ரூபாய் ஒதுக்கி செலவிடுகிறது. மூன்றரை லட்சம் ஆசிரியர்கள், அரசிடம் ஊதியம் பெற்று பணியாற்றுகின்றனர். அலுவலக பணியாளர்களும், ஆய்வக உதவியாளர்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள், இவர்களுக்கெல்லாம் தலைமையாக பள்ளிக் கல்வி அமைச்சர் என, மிகப்பெரிய நிர்வாக முறை செயல்படுகிறது.
அதிர்ச்சி
ஆனால், தனியார் பள்ளிகளில் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என, சிறிய நிர்வாக முறையே உள்ளது. இந்த சிறிய நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணும், அதிக தேர்ச்சியும் பெறுகின்றனர்.ஆனால், மக்களின் வரிப்பணத்தை கோடி கோடியாய் செலவு செய்து நடத்தப்படும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெறுவது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைந்தது குறித்தும், மாணவர்களின் மதிப்பெண்கள் சரிந்தது குறித்தும், பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக, தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகளின் பட்டியலை, மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே தயாரிக்க,முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக