இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க தலைமை ஆசிரியையின் புதிய முயற்சி

சனி, 14 அக்டோபர், 2023

 




மாணவ, மாணவியரைப் படிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொள்வது வழக்கம். கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் அரசு பள்ளி தலைமை ஆசிரியை கலாவல்லி.


கரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் இரண்டு ஆண்டுகள் மூடப்பட்டிருந்தபோது மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். கற்றலில் பெரிதும் இடைவெளி ஏற்பட்டது. அந்த இடைவெளியைப் போக்கதமிழக அரசு "எண்ணும் எழுத்தும்திட்டம்”, "இல்லம் தேடிக் கல்வி"போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள் ளது. இருந்தாலும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க சொல்லும்படியாக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.


ஆட்டிப் படைக்கும் மன அழுத்தம்


ஒருவரை சூழ்நிலையும், சேர்க்கையும்தான் பாழாக்குகிறது என்று பொதுவாக சொல்வதுண்டு. ஆனால் அத்தனையையும் தாண்டி மன அழுத்தமே மாணவர்களை ஆட்டிப் படைக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.


இந்நிலையில் மாணவர்களின் கோபத்தை எப்படிக் கையாள்வது என்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கலாவல்லி. மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க புதிய முயற்சியில் இறங்கியுள்ள அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதைப் பார்ப்போம்.


ஒரு மாணவர் தனது சக மாணவரை மூர்க்கத்தனமாக தாக்கினார். அந்த சம்பவம் எனது கவனத்துக்கு வந்தது. காயமடைந்த மாணவரை முதலுதவிக்காக அனுப்பிவிட்டு, தாக்கிய மாணவரை அழைத்துப் பேசினேன்.


அதற்கு அவர் கூறுகையில், “என்னைக் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான். எனது பெயரைக் கெடுப்பதிலே குறியாக இருக்கிறான். பல தடவை சொல்லிப் பார்த்தேன் கேட்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் அடித்துவிட்டேன்" என்றான் சற்று ஆதங்கத்துடன்.


கோபத்தை குறைக்க புதிய முயற்சி

அந்த மாணவரின் கோபத்தை குறைக்க நான் ஒரு புதிய முயற்சியில் இறங்கினேன். குத்துச் சண்டையில் பயன்படுத்தப்படும் "பஞ்சிங் பேக்"கைப்போல பழைய துணிகளைக் கொண்டுஒன்றை உருவாக்கி, எனது அறைக்கு அருகில் தொங்கவிட்டேன். ஆத்திரத்தில் சக மாணவனை அடித்தவரை அழைத்து பழைய துணிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட "பஞ்சிங் பேக்கில்" தனது கோபம் தீரும் வரை குத்துமாறு கூறினேன்.


அதுபோலவே அந்த மாணவரும் குத்தி தனதுகோபத்தைக் குறைத்துக் கொண்டார். சிறிதுநேரத்தில் கோபம் குறைந்து தனது தவறையும் உணர்ந்தார். புதிய முயற்சி வெற்றி பெற்றது என்னையும், மாணவர்களையும் குஷியாக்கியது.


மற்றொரு மாணவர் போதை மருந்துக்கு அடிமையானது தெரியவந்தது. வகுப்பறையில் அவர் இருக்கும்போது அவரிடம் இருந்து வித்தியாசமான துர்நாற்றம் அடிப்பதாக புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அவரை அழைத்துப் பேசியபோது அவர் போதை மருந்துசாப்பிட்டு அந்த பழக்கத்துக்கு அடிமையானதை அறிந்து அதிர்ச்சியுற்றேன்.


அவர் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவர் பணம் கொடுத்துகடைக்குப் போய் அந்த போதை மருந்தை வாங்கி வரச் செய்துள்ளார். அதை அடிக்கடி வாங்கி வந்தபோது அதை நாமும் பயன்படுத்தினால் என்ன என்று எண்ணி, பயன்படுத்தத் தொடங்கி பின்னர் அந்த போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டதாகக் கூறினார்.


புதிய முயற்சி


இந்த கெட்ட பழக்கத்தை எப்படி சரி செய்வது? என்று யோசித்தபோது, அந்த மாணவரை கடுமையாகத் தண்டித்தால் எதிர்விளைவுகள்தான் ஏற்படும் என்பதால், அன்பாகக் கண்டித்ததுடன், 50 புளிப்பு ஆரஞ்சு மிட்டாய்வாங்கிக் கொடுத்து, அந்த போதை மருந்து சாப்பிடத் தோணும்போதெல்லாம் புளிப்பு மிட்டாயை சாப்பிடுவதுடன் எனது கண்டிப்பையும் நீ நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.


அதை அவர்செய்கிறாரா என்றும் அவ்வப்போது கண்காணித்தேன். பிற ஆசிரியர்களும் கண்காணித்தார்கள். அந்த மாணவரின் நடத்தையில் நாளடைவில் நல்ல மாற்றம் ஏற்பட்டதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம்.


இதுபோலமாணவர்களின் மன நிலையை உரியமுறையில் அணுகி தெரிந்துகொண்டால் அதற்கான தீர்வையும் ஆசிரியர்களால் கண்டுபிடித்துவிட முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தலைமை ஆசிரியை கலாவல்லி.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent