தமிழக கல்வித் துறையில் ஆசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) மூலம் நிரப்பப்படுகின்றன. ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள்அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆண்டுதோறும் டிஆர்பி வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேர்வுக்கால அட்டவணை கடந்த ஜனவரியில் வெளியானது. அதில் ஆசிரியர், விரிவுரையாளர் உட்பட 9,494 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஆர்பி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:
அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 1,087-ல் இருந்து 1,874 ஆகவும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 3,902-ல் இருந்து 3,987 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான போட்டித் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். இதேபோல, அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் காலிப்பணியிடம் 24 உயர்த்தப்பட்டு 1,358 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியிடம் குறைப்பு
அதேநேரம் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடம் 97 (104) ஆகவும், எஸ்சிஇஆர்டி விரிவுரையாளர் பணியிடம் 155 (167) ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதில் என்சிஇஆர்டி விரிவுரையாளர் பணித்தேர்வு அக்டோபரில் நடத்தப்பட உள்ளது. இதுதவிர அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
2,407 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 896 அதிகரிக்கப்பட்டு மொத்தம் 10,371 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக