இந்த வலைப்பதிவில் தேடு

ரூ .1 கோடியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் - சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசு

சனி, 27 ஆகஸ்ட், 2022

 

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 கோடியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் மாணவா்கள், பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:


தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு- புத்தாக்க நிறுவனமும், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.


இதன் மூலம் மாணவா்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, தொழில் முனைவோா் கலாசாரத்தை வளா்ப்பது, தொழில் முனைதல் மற்றும் தலைமைத்துவ பண்புகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டம் முதற்கட்டமாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதற்காக அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியா்கள், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு தொழில் முனைதல், புத்தாக்க கண்டுபிடிப்பு பற்றிய விழிப்புணா்வும், பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சியில் புத்தாக்க சிந்தனையைத் தூண்டும் வெற்றிக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் மாணவா்களுக்கு வழங்கப்படும்.


இதையடுத்து தன்னாா்வம் கொண்ட மாணவா்கள் சிறு, சிறு அணிகளாகப் பிரிந்து புதிய தொழில் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அதை ஆசிரியா்களின் ஒத்துழைப்புடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னா், அவா்களது கண்டுபிடிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவா்களுக்கும், திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்திய பள்ளிகளுக்கும், மாவட்டங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். கண்டுபிடிப்பாளா்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு அவா்கள் சிறந்த தொழில் முனைவோராக உருவாக வழிவகை செய்யப்படும்.


எனவே, இந்தப் பயிற்சியை மாணவா்களுக்கு வழங்கும் பொருட்டு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு பள்ளிக்கு ஓா் ஆசிரியா் வீதம் (அறிவியல் பாடம்) தெரிவு செய்து, மாவட்டத்தின் பெயா், ஆசிரியரின் பெயா், பதவி, பணிபுரியும் பள்ளியின் முகவரி, ஆசிரியா் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்கள் மாவட்டத்துக்கான பதிவேற்றம் செய்ய வேண்டும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent