இந்த வலைப்பதிவில் தேடு

ஆகஸ்ட் 15ல் பெற்றோரைக் கூட்டி முறையிட ஆசிரியர்கள் முடிவு!

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

 

டிபிஐ வளாகத்தில், இராணுவக் கட்டுப்பாடு போன்ற ஒரு அறையிலிருந்து, திடீர் திடீரென பிறப்பிக்கப்படும் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமா? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது.




இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவர் வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பள்ளிக்கல்வித் துறை ஆணையர், ராணுவ கட்டளையைப் போல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு செயல்முறைக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.


ஆகஸ்ட் 1முதல் பள்ளிகளில் ஏட்டையும், நோட்டையும் பயன்படுத்தி மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை, ஆசிரியர்களின் விடுப்புப் பதிவுகள் எதையும் எழுதக்கூடாது, அனைத்தையும் கல்வி செயலியின் மூலம் தான் செய்ய வேண்டும். மூன்றரை லட்சம் ஆசிரியர்கள், 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றாடம் காலையில் கல்விச் செயலி மூலமாகத்தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.


ஒரே சமயத்தில் இந்தப் பணிகளை செய்யப் போனால் கல்விச் செயலி தாங்குமா? இந்த எண்ணிக்கையை தாங்கும் வகையில் கல்விச் செயலியின் திறனை மேம்படுத்தி உள்ளார்களா? பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நெட்வொர்க் சரியாக வேகமாக இயங்கினாலே இப்பணியினை செய்து முடிக்க ஒரு மணி நேரமாகும்.


இந்தச் செயலியின் மூலம்தான் அனைத்துப் பதிவுகளும் நடைபெற வேண்டுமென்கிறீர்கள். செயலி திடீரென முடங்கி விட்டால் எண்பது லட்சம் மாணவர்கள், மூன்றரை லட்சம் ஆசிரியர்களுடைய ஆதாரப் பதிவுகளை எங்கே போய் தேடிக் கண்டுபிடிப்பது? பள்ளிக்கல்வி ஆணையரும், மாநில திட்ட இயக்குனரும் ஒரு பத்திரத்தில் கையொப்பமிட்டு எந்த பாதிப்பும் வராது, பதிவுகள் எதுவும் காணாமல் போகாது, பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என்ற உறுதியினை வெளியிடுவார்களா?


ஒரு உத்தரவை போடுவதற்கு முன்னதாக அப்பணியினை செய்து வருகிற ஆசிரியர்களின் கருத்துக்களை நீங்கள் கேட்டீர்களா? அல்லது, கால அவகாசம் கொடுத்து ஏதாவது ஒரு மாவட்டத்தை முன்னுதாரணமாக எடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தி முடிவினை எடுத்தீர்களா? பள்ளிக் கல்வி ஆணையரகத்தையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செய்திருக்கலாமே?


எண்பது லட்சம் மாணவர்கள், மூன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதுதான் உங்களின் திட்டமா? கற்பித்தல் பணிகளை விட இணையதள பணியே மேலானது, ஆசிரியர்கள் பாடம் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை, கல்விச் செயலியை மட்டும் செயல்படுத்தினால் போதும். இல்லம் தேடிக் கல்வியில் மாணவர்கள் படித்து கொள்வார்கள், என்று எண்ணுகிறீர்களா? இதுதான் பள்ளிக் கல்வித்துறையின் நோக்கமா?


உலக நாடுகள் மட்டுமல்ல, இந்தியப் பெரு நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த இணையதள கெடுபிடி தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிப்பதன் ரகசியம்தான் என்ன? தேசிய அடைவுத் திறன் தேர்வில் தமிழ்நாடு பின்னடைவாக போய்விட்டது என்று கவலைப்படுகிறீர்களே? இனி என்னதான் நடக்கப்போகிறது? பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை. பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களையும் இணையதள செயல்பாடுகளினால் பாடம் நடத்த அனுமதிப்பது இல்லை. கற்பித்தல் பணிக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டால் கல்வியில் தரம் எங்கிருந்து உயரும்?


பள்ளி மேலாண்மைக் குழுவில் தலைமை ஆசிரியர் என்ற பதவியை அப்புறப்படுத்திவிட்டு கூட்ட அழைப்பாளர் என்று பெயர் மாற்றம் செய்து விட்டீர்கள். திராவிட மாடல் ஆட்சியில் இனி நாங்கள் எங்கு போய் முறையிடுவது? எங்கு முறையிட்டும் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. யாரிடம் சொல்லியும் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதே எங்களுக்கு தெரிகிறது.


ஆகஸ்ட் 15 ஆம் நாள், 75-வது சுதந்திர தினத்தன்று, தொடக்கக் கல்வி முதல், உயர்நிலை – மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கக்கூடிய அனைத்துத் தலைமையாசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தைக் கூட்டி, அனைத்து பெற்றோரையும் வரவழைத்து, பள்ளிக்கல்வித்துறையின் நிலைமையையும், ஆசிரியர்களை பாடம் நடத்த அனுமதிக்கும் வாய்ப்பை பள்ளிக்கல்வித்துறை தட்டிப் பறிப்பதையும் பதிவு செய்ய உள்ளோம்.


மாணவர்களின் எதிர்காலத்தையும் ஆசிரியர்களின் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏட்டிலும், நோட்டிலும் வருகைப் பதிவேட்டினை நடைமுறைப்படுத்துவது தான் பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என்பதை தெரியப்படுத்திக் கொண்டு, எங்கள் பணியை நாங்கள் செய்யவிருக்கிறோம்.


கல்விச் செயலியினால் ஏற்படும் ஆபத்துக்களை நாங்கள் சொல்கிறோம்; பழைய முறைப்படி பதிவேடுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை நீங்கள் பட்டியலிடுங்கள்; யாருக்காகவும் நாங்கள் சங்கங்கள் நடத்தவில்லை. எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள ஆசிரியர்கள் முகம் பார்த்து, அவர்களுக்காகத்தான் சங்கம் நடத்தி வருகிறோம்.” இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent