இந்த வலைப்பதிவில் தேடு

ரூ.20.26 கோடியில் 865 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் தகவல்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

 




தமிழகத்தில் ரூ.20.26 கோடியில் 865 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கி அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது:


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 62 அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் எண்ணிக்கை 4,475, மாணவியர் எண்ணிக்கை 5,076. மொத்தம் 9,551 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.4 கோடியே 84 லட்சத்துக்கு 97 ஆயிரத்து 517 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.


தமிழக அரசு 1,541 தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 1,44,000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சத்து 99 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆறு கோடியே இருபது லட்சம் செலவில் எண்ணும் எழுத்தும் என்ற இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.


கரோனா காலத்தில் கல்வி கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை சரி செய்ய ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலும் மாணவர்களுக்கு ரூ.199.96 கோடி மதிப்பில் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.


தமிழகத்தில் ரூ.20.26 கோடியில் 865 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் கல்லூரிகளில் பயில 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டு படிக்கும் கல்வி கட்டணம் கூட அரசே ஏற்றுக் கொள்ளும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் அதில் கல்வி செல்வம் தான் சிறந்தது. ஆகவே மாணவர்கள் அனைவரும் பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக பயின்று அனைத்து துறையிலும் சிறந்த வல்லுநர்களாக திகழ வேண்டும் என்றார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச் செல்வி, குன்றத்தூர் நகர மன்றத் தலைவர் கோ.சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent