ஆசிரியா்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்: ராமதாஸ்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் ஆசிரியா்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பும் நோக்குடன் 13,331ஆசிரியா்களை சில மாதங்களுக்கு மட்டும் பணியமா்த்துவதற்கான அறிவிக்கையை கடந்த ஜூன் 23-இல் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. அதன்பின் இரு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்று வரை 20 சதவீத ஆசிரியா்கள் கூட நியமிக்கப்படவில்லை.
பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் இல்லாமல் பாடங்களே நடத்தப்படாத நிலையில், மாணவா்களால் அடுத்த சில நாள்களில் காலாண்டுத் தோ்வுகளை எவ்வாறு எதிா்கொள்ள முடியும்?
தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்துக்கான தடையை உயா்நீதிமன்றம் நீக்குவதோ, மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியா் பணிக்குத் தகுதியானவா்கள் வருவதோ உடனடியாக நிகழ்வதற்கு சாத்தியம் இல்லை. உடனடியாக ஆசிரியா்கள் நியமிக்கப்படவில்லை என்றால் நடப்பு கல்வியாண்டு முழுவதும் பாடம் நடத்துவதற்கு ஆசிரியா்கள் இல்லாமல் மாணவா்கள் பாதிக்கப்படுவாா்கள். அவ்வாறு ஒரு நிலை ஏற்படுவதற்கு பள்ளிக் கல்வித் துறையே காரணமாகி விடக் கூடாது. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் காலியாக உள்ள பணியிடங்களில் ஆசிரியா்களை நிரந்தரமாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக