பெண் கல்வியின் முக்கியத்துவம்பற்றி என்னதான் கூக்குரல் போட்டு வந்தாலும், ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்ற பழமொழியையே இந்த 20ம் நூற்றாண்டிலும் பெரும்பாலானோர் பின்பற்றி வருகின்றனர். ஆனால், இவற்றை எல்லாம் ஓரம்கட்டி, பெண்கள் பல துறைகளில் தற்போது சாதனை படைத்து வருகிறார்கள். இதற்கான பயணம் பள்ளி பருவம் முதலே தொடங்க ஆரம்பித்து விட்டது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலர் படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டுகளிலும் சக்கப்போடு போடுகின்றனர்.
தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே, குழந்தைகளின் தனி திறன்கள் வளரும் என்ற சொல்லை மாற்றி அமைத்து தனிப்பட்ட திறன்களில் சிறந்து விளங்குகின்றனர். இந்த பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி சந்தோஷினி 2 முறை தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தனி மற்றும் குழு பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். நேபாள நாட்டில் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கும் சந்தோஷினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘நான் 7ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில்தான் படித்து வந்தேன். ஆனால், அங்கு எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இங்கு எனக்கு நிறைய ஆதரவும் ஊக்கமும் அளிக்கின்றனர். தினமும் மாலையில் பள்ளி முடிந்ததும் 1 மணி நேரம் பயிற்சி செய்வேன். நேபாளம் செல்வதற்கு கூட பள்ளியில் இருந்து எனக்கு பண உதவி செய்கின்றனர். நிச்சயம் வெற்றி பெறுவேன்’’ என்றார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு கற்றலில் இடைவெளி ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே, மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் வினாடி வினா போட்டியை நடத்தியது பள்ளிக் கல்வித்துறை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 18 முதல் நவம்பர் 8ம் தேதி வரை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற 89 மாணவர்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா வால் முடியவில்லை. இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் மாநில மகளிர் பள்ளியில் தற்போது 11ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலட்சுமி.
அவர் கூறுகையில், ‘‘ வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று, என்றாவது ஒருநாள் துபாய் செல்வேன் என்ற ஆசையுடனும், நீண்ட எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் தற்போது செஸ் மீதும் அதிக ஆர்வம் வந்துள்ளது. அதையும் ஆர்வத்துடன் கற்று வருகிறேன். ’’. வளரும் இளம் தலைமுறையினருக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுவிற்கு விளையாட்டுகளும் முக்கியம். அவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்குவிக்கும் கடமை பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே அதிகம்.
மாணவிகளின் பயிற்சி பற்றி உடற்கல்வி ஆசிரியை சுசித்ரா கூறியதாவது: எங்கள் பள்ளி மாணவிகள் பலரும் பலவகையில் திறமை மிக்கவர்களாக உள்ளனர். இந்த மாதம் 16ம் தேதி நடக்க இருக்கும் மண்டல அளவிலான போட்டிக்கு அவர்களை தயார் செய்து வருகிறேன். எங்கள் பள்ளியில் இருந்து கிட்டத்தட்ட 200 மாணவிகள் மண்டல அளவிலான போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
பள்ளி முடிந்ததும் 1 மணி நேரம் அவர்கள் அனைவருக்கும் விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னையில் இருந்து 2 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதில் எங்கள் பள்ளி மாணவியும் ஒருவர். ஜெய என்ற மாணவி போட்டியில் வெற்றி பெற்று, செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்வையிட்டு வருகிறார். இதன் துவக்க விழாவில் தென் கொரியாவின் பெயர் பதாகையை ஏந்தி அவர் வலம் வரும்போது பள்ளிக்கே ஒரு பெருமையாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக