அரசு பள்ளி மாணவர்களுக்கு தலை பெரியதா, சிறியதா என்பது உள்பட, 36 வகையான தகவல்களை சேகரிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன், பள்ளி மாணவியரிடம், மாதவிடாய் குறித்த தகவல்களை பெற்று, அதனை செயலியில் பதிவிட அறிவுறுத்தப்பட்டது. நம் நாளிதழில் செய்தி வெளியானதும், அந்த தகவலை திரட்ட வேண்டாம் என, நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தகவல் பதிவுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், 36 வகையான நோய்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் விபரத்தை, 'எமிஸ்' செயலியில் பதிவிடுமாறு, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, ரத்த சோகை, தொழுநோய், தோல்நோய், தைராய்டு, கண் பார்வை பாதிப்பு, காசநோய், பல் நோய்கள், வைட்டமின் குறைவு, நோய் எதிர்ப்பு குறைவு, சிறுநீர் பாதை பாதிப்பு, மாணவர்களுக்கு பெரிய தலையா, சிறிய தலையா, இரண்டு கண்களும் ஒரே அளவில் உள்ளதா என்பது உள்ளிட்ட ஆய்வுக்கான பட்டியல்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரையும் தனியாக அழைத்து, அவரது உடலை சோதனை செய்து, இந்த நோய்கள் குறித்த மாணவர்களின் தகவல்களை பதிவிட வேண்டும்.
கடந்த மாதத்தில், ஒரு வாரம் முழுதும் மாணவர்கள் சாப்பிட்ட உணவு வகைகளை பதிவு செய்ய, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டது. நடப்பு கல்வியாண்டில், பள்ளிகள் திறந்தது முதல் பாடம் நடத்த விடாமல், பல்வேறு திட்ட பணிகளின் புள்ளிவிபர சேகரிப்பு மற்றும் செயலாக்கம் தொடர்பாக, கூடுதல் பணி வழங்குவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக