இந்த வலைப்பதிவில் தேடு

7.5% இடஒதுக்கீடு உதவிபெறும் பள்ளிக்கும் நீட்டிப்பு - உயர் நீதிமன்றம் யோசனை

சனி, 15 அக்டோபர், 2022

 



தனியார் மில் ஒன்றில் இரவு நேரக் காவலாளியாக பணிபுரியும் ஏழைத் தொழிலாளியின் மகள் வர்ஷா 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். அந்த மாணவிமருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் துணை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். ‘கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி' என்ற படிப்பை படித்துக் கொண்டே அந்த மாணவி இருமுறை நீட் தேர்வு எழுதினார். முதல்முறை 210 மதிப்பெண்ணும், மறுமுறை 250 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். அரசு உதவிபெறும் பள்ளியில் படித்ததால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தனக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு பறிபோய்விட்டதாகக் கூறி வர்ஷா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது , அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார், கூடுதல் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி, “அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் தங்களுக்கும் மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்து விட்டது” என்றனர். அதையடுத்து நீதிபதி, ‘‘அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்து விட்ட நிலையில், மனுதாரர் தற்போது அதே நிவாரணத்தைக் கோர முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.


அதேநேரம், “அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசுதான் நிதியுதவி செய்கிறது என்பதாலும், அங்கு பயிலும் மாணவர்களும் வசதியான, பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதையும், அவர்களின் சமூக நிலையையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என யோசனை தெரிவித்துள்ளார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent