பேஸ்புக்கில் போலி விளம்பரத்தை நம்பி உணவு ஆர்டர் செய்த பெண்ணின், வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 8.46 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் விதவிதமான பெயர்களில் சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த பாந்த்ராவை சேர்ந்த 54 வயது பெண் ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து மர்மநபர்கள் ரூ.8 லட்சத்தை திருடியுள்ளனர். இது குறித்து போலீசில் அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: -
பேஸ்புக்கில் மகாராஜா போக் தாலி ஒன்று வாங்கினால், மற்றொன்று இலவசம் என விளம்பரம் வந்தது. இதனையடுத்து அதனை ஆர்டர் செய்து ரூ.200 பணம் செலுத்த முயற்சித்தேன். அப்போது, திடீரென என்னுடைய போனை ரிமோட் மூலம் இயக்க துவங்கிய மர்மநபர், என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் பரிவர்த்தனை மூலம் திருடி கொண்டார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
போலீசார் கூறுகையில்,
பேஸ்புக்கில் ரூ.200க்கு தாலி விற்பதை அறிந்த பெண், ஆர்டர் செய்துள்ளார். அடுத்தப்படியாக பணத்தை செலுத்த வங்கி விவரம் மற்றும் ,மொபைல் எண் விவரங்களை அளித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு மர்மநபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. போனுக்கு வரும் மற்றொரு லிங்க் ஒன்றை உறுதி செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.
போதிய விழிப்புணர்வு இல்லாத பாதிக்கப்பட்ட பெண், தனது போனில் ரிமோட் அக்சஸ் செயலியை தரவிறக்கம் செய்துள்ளார். இதன் மூலம் போனுக்கு வரும் ஓ.டி.பி.,யை கண்ட்ரோலில் எடுத்த மோசடி நபர், 27 பரிவர்த்தனைகள் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடியுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பெண் வங்கிக்கு சென்று விவரங்களை சேகரித்து, பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மஹா.,வில் ரொட்டி உள்பட பல்வேறு உணவுகள் அடங்கிய பிரபலமான மகாராஜா போக் தாலி வழக்கமாக ரூ.1,500க்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக