இந்த வலைப்பதிவில் தேடு

தீபாவளிக்கு ருசியான அதிரசம் செய்வது எப்படி? டிப்ஸ் தரும் ஸ்பெஷல் அதிரசக் கடைக்காரர்!

சனி, 11 நவம்பர், 2023

 





தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு குழப்பத்தில் இருப்பாங்க நம்ம குடும்பத் தலைவிகள். வீட்டுல முறுக்கு, லட்டு, மிக்சர்னு செஞ்சாலும், தீபாவளிக்குன்னு ஸ்பெஷலா கடைகள்ல வாங்குற ஸ்வீட்டுகளுக்குத் தனி மரியாதைதான்!


இந்தச் சூழலில், கரூரில் கோவை சாலை, வடிவேல் நகர் பேருந்து நிறுத்தத்தில் 10 வருடங்களாக இயங்கிவரும் `கரூர் ஸ்பெஷல் அதிரசம் கடை'க்கு ஒரு பகல் பொழுதில் சென்றிருந்தோம். இந்தக் கடையை நடத்திவரும் ஜெகதீசன், வாடிக்கையாளர்களை கவனிப்பதில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். நடுவில் கிடைத்த சில நிமிட இடைவேளையில் நம்முடன் பேசினார்...



அதிரசம்தான் எங்க ஸ்பெஷல்!

``நாங்க இந்தக் கடையை 2012-ல ஆரம்பிச்சோம். நான் முதல்ல கேரளாவுல ஃபைனான்ஸ் தொழில் பண்ணிக்கிட்டு இருந்தேன். எங்க அப்பாதான் ஆரம்பத்துல சமோசா, வடை போண்டா எல்லாம் மொத்தமா ஆர்டர் எடுத்து கடைகளுக்கு சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தார். 2010-ல அப்பா இறந்துட்டாங்க. நான் வீட்டுக்கு ஒரே பையன்தான். அம்மாவைப் பாத்துக்க யாரும் இல்ல. அப்புறமா நான் கேரளாவுல இருந்து கரூருக்கு வந்துட்டேன்.


அப்பதான் அதிரசம் செஞ்சு வியாபாரம் பண்ணலாம்னு ஒரு ஐடியா வந்துச்சு. இதைப்பத்தி அம்மா, மனைவிகிட்ட சொன்னேன். அவங்களும் ஓகே சொன்னாங்க. ஆரம்பத்துல எனக்கு அதிரசம் எப்படி செய்யறதுன்னே தெரியாது. அதிரசம் செய்ய அம்மாச்சிதான் சொல்லி கொடுத்தாங்க. அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டு, கடை போட்டோம்.



கடை ஆரம்பிச்சபிறகு நல்லா தொழில் பிக்கப் ஆயிடுச்சு. முதல்ல `அண்ணாமலை அதிரசக்கடை' னு தான் வச்சோம். அதுக்கப்புறம் நம்ம ஊரை பெருமைப்படுத்தணுங்கிறதுக்காக `கரூர் ஸ்பெஷல் அதிரசக்கடை' ன்னு வச்சிட்டோம்.


எங்க கடை ஸ்பெஷலே, அதிரசம்தான். இது மட்டுமில்லாம, முறுக்கு மிக்சரை நாங்களே தயாரிச்சு விற்பனை செய்யறோம். இது எல்லாமே நாங்களே தயாரிக்கிறது. வெளியில எந்தக் கடைகளுக்கும் சப்ளையும் பண்றதில்லை. அதனாலதான் மக்கள் எங்ககிட்ட வர்றாங்க.


அதிரசம் செய்யும் முறை


நாங்க மொத்தமா அரிசி மில்லுல இருந்து பச்சரிசி வாங்குவோம். வெல்லமும் மொத்தமாகவே வாங்கிக்குவோம். முதல்ல அரிசியை ஊற வச்சு, மூணு நாலு தடவை நல்லாக் கழுவுவோம். அப்பதான் அரிசியோட ஸ்மெல் ரொம்ப வராது. நல்லா அரிசியைக் கழுவி வெயில்ல காய வைப்போம். அரிசி நல்லா காஞ்சவுடனே மில்லுக்குக் கொண்டு போய் அதிரசம் செய்யறதுக்கு ஏத்த மாதிரி பக்குவமா அரைச்சிக்குவோம்.


நாங்க வெள்ளை சர்க்கரை பயன்படுத்த மாட்டோம். ஒரு கிலோ அரிசிய அரைச்சா கிடைக்கிற மாவுக்கு, 600 கிராம்ல இருந்து 750 கிராம் வரைக்கும் வெல்லம் எடுத்துக்குவோம். அந்த வெல்லத்தை நல்லா பெரிய பாத்திரத்தில போட்டு, கேஸ் அடுப்ப சிம் லையே வச்சு நல்லா காய்ச்சுக்குவோம். வெல்லப்பாகு நல்லா காய்ச்சினா, நூல் மாதிரி வரும். இதுதான் நூல் பதம்- னு சொல்வாங்க. இதை மாவுல ஊத்தி நல்லா பதமா பிசையனும். கூடவே ஏலக்காயும் சுக்கும் சேத்துக்குவோம். ஏலக்காய் போடுறதுனால அதிரசம் நல்லா வாசமா இருக்கும். பச்சரிசி சாப்பிடும்போது, வயிறு வலிக்கக்கூடாதுங்கிறதுக்காக சுக்கும் சேர்த்துக்கிறோம்.



அதிரசம்தித்திக்கும் தீபாவளி முதலீடு... கொண்டாட்டத் திருநாளில் கோலாகலமான 10 பங்குகள்!

வாடிக்கையாளர்கள் கண்ணு முன்னாடிதான் எல்லாமே பண்ணுவோம். அதே சமயம், முன்கூட்டியே அதிரசம் போட்டு வச்சிருக்க மாட்டோம். ஒவ்வொரு நாளும் பிரெஷ்ஷாதான் போட்டு வச்சிருக்கோம். வாடிக்கையாளர்கள் வரும்போதே சூடாதான் கேப்பாங்க. அவங்க கண்ணு முன்னாடியேதான் போட்டுக் கொடுப்போம். இப்ப தீபாவளி டைம்ங்கிறதால‌ கொஞ்சம் முன்னாடியே போட்டு வச்சுக்கிறோம். இது இல்லாம மொத்தமா ஆர்டர் எடுத்தும் பண்ணி கொடுத்துட்டு இருக்கோம்.


இது மட்டுமில்லாம சுவைக்காக கொஞ்சமா பனங்கற்கண்டும் நாட்டுச்சர்க்கரையும் சேர்த்துக்குவோம். இதெல்லாம் சேர்த்து பிசைஞ்ச மாவ, மூணுல இருந்து நாலு நாள் கழிச்சுதான் அதிரசம் சுடுவோம். இதுதவிர வேற எந்தப் பொருளுமே சேர்க்கிறது இல்ல.


சோடா உப்பு, டால்டா வேற எந்த செயற்கைப் பொருளும் சேர்க்கறது இல்ல. அதே மாதிரி, அதிரசம் சுடறதுக்கு கடலை எண்ணெய் மட்டுமே பயன்படுத்துறோம். வேற எந்த ஆயிலும் பயன்படுத்துறது இல்ல. கடலை எண்ணெயில் சுடும்போதுதான் அதிரசம் நல்லா வரும்" என்று கூறி முடித்தார்.


''அதிரசம் சுடறதுக்கு கடலை எண்ணெய் மட்டுமே பயன்படுத்துறோம். வேற எந்த வகை ஆயிலும் பயன்படுத்துறது இல்ல. கடலை எண்ணெயில் சுடும்போதுதான் அதிரசம் நல்லா வரும்...''



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent