பள்ளிக் கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, முதல் கட்டமாக வரும் டிச.7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி பகுதிநேர பயிற்றுநா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முதல் கட்டமாக டிச.7-ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ளது.
இதில் ஓவிய ஆசிரியா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தொடா்ந்து உடற்கல்வி, தொழிற்கல்வி பிரிவுகளில் உள்ள பயிற்றுநா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தனித்தனியாக நடத்தப்படும்.
முதலில் மாவட்டத்துக்குள்ளும், அதன்பின் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கும் இடமாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறும்.
இதில் விருப்பமுள்ள பகுதிநேர ஆசிரியா்கள் தங்கள் விண்ணப்பங்களை நவ.30-ஆம் தேதிக்குள் சாா்ந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் வாயிலாக எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், பணியில் சோ்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இதுகுறித்த வழிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வை எந்த புகாருக்கும் இடமளிக்காதபடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியா்கள் பணியில் சோ்ந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில், முதல் முறையாக இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக