பள்ளிக்கல்வி துறையின் மூத்த இயக்குனர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், கமிஷனர், இயக்குனர்கள், இணை இயக்குனர் பதவிகளுக்கு இடமாறுதல் பட்டியல் தயாராகியுள்ளது; அதிகார வரம்புகளும் மாற்றப்பட உள்ளன.
தமிழக பள்ளிக் கல்வி துறையின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக பணியாற்றி வந்தார்; இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், தனியார் பள்ளி இயக்குனரகமாக மாற்றப்பட உள்ளது.
பதவி உயர்வு
கூடுதல் அதிகாரம் மற்றும் முக்கியத்துவம் நிறைந்த இந்த பதவியில், தற்போதைய இயக்குனர்களில் ஒருவருக்கு இடமாறுதல் வழங்கப்பட உள்ளது.
இதன் காரணமாக, பள்ளிக் கல்வி துறையில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் அளவில், சிறிய அளவில் மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தகுதியான இணை இயக்குனர்கள் சிலருக்கு, இயக்குனராக பதவி உயர்வும் வழங்கப்பட உள்ளது. நீதிமன்ற வழக்கு மற்றும் பணி மூப்பு விபரங்களை கணக்கில் எடுத்து, பதவி உயர்வு பட்டியல் தயாராகிஉள்ளது.
பள்ளிக் கல்வியின் அதிகாரம் மிக்க பொறுப்பான, பள்ளிக் கல்வி இயக்குனர் பொறுப்பை மீண்டும் அமல்படுத்த லாமா என்றும் அரசு ஆலோசித்து வருகிறது.
இயக்குனருக்கு சமமான நிலையில், கலெக்டர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, கமிஷனர் பதவியில் நியமிக்கலாம் என்றும், கமிஷனருக்கு, பள்ளிக்கல்வியின் அனைத்து பிரிவுகளின் கண்காணிப்பு பணிகளை மட்டும் வழங்கலாம் என்றும், வரைவு கருத்துரு தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
முதல்வர் ஆலோசனை
இந்த கருத்துருவில், சட்ட ரீதியான சாதக, பாதகங்கள் மற்றும் அரசின் நிர்வாக நிலைப்பாடுகளின் அடிப்படையிலும், முதல்வர் ஆலோசனை அடிப்படையிலும், முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்த முடிவுகளின்படி, பள்ளிக்கல்வியில் அதிகார பகிர்வு மற்றும் அதிகாரிகளின் மாற்றங்கள் ஓரிரு நாளில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக