இந்த வலைப்பதிவில் தேடு

‘கலைத் திருவிழா2022-2023’ பரிசளிக்கும் விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முழு உரை

வெள்ளி, 13 ஜனவரி, 2023

 



கலைப் போட்டிகளில் பெற்ற வெற்றிக்கு மாணவ, மாணவியரின் துணிச்சலும்,  தன்னம்பிக்கையும், அறிவாற்றலும்  தான் அடிப்படைக் காரணம். இதை வாழ்நாள் முழுமைக்கும் மாணவர்கள்  பயன்படுத்திக்  கொள்ள வேண்டும். மாணவர்களின் அறிவு, கலை அறிவாக, கல்வி அறிவாக, பகுத்தறிவாக வளர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில்,  நடத்தப்பட்ட ‘கலைத் திருவிழா2022-2023’ போட்டிகளில்  மாநில அளவில் வெற்றி பெற்ற 1850  மாணவ மாணவியருக்கு பரிசளிக்கும் விழா சென்னை நேருவிளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.


இந்த நிகழ்வில் அரசு செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லாஉஷா, பள்ளிக்கல்வி  ஆணையர் நந்தகுமார், மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் இயக்குநர் ராமேஸ்வர முருகன், மற்றும்  இயக்குநர்கள்,  இணை  இயக்குநர்கள் பங்கேற்றனர்.


கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாடம், பாடப்புத்தகம், வகுப்பறை ஆகியவற்றைத் தாண்டி, கற்பித்தல் வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை பயன்படுத்தி வருகிறது. நமது மரபார்ந்த கலைகளை மாணவர்கள் நெஞ்சில் விதைப்பதை நான் பாராட்டுகிறேன். பள்ளிக் கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும், விரிவடையும். பிற பாடங்களை கற்பதால் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். இதனால் தன்னம்பிக்கை பெறுவார்கள். 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கலைப் பயிற்சி அளிக்கவும் கல்வியில் கலைகளை கொண்டு வரும் வகையில், கால அட்டவணை உருவாக்கி கலை அரங்கமாக செயல்படுத்தி வருகிறது.


கலையில் ஆர்வமுள்ள ஒரு ஆசிரியரால் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பும் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அளவில் கருத்தாளர்களின் பங்கெடுப்புடன் அனைத்துக் கலை வடிவங்களுக்கும் கலைத்திட்டம் உருவாக்கப்பட்டு, இந்தத் திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்பேரில்,  கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் நீங்கள் பங்கெடுத்து பரிசுகளைப் பெற்றுள்ளீர்கள்.‘‘கலையரசன்’’, ‘‘கலையரசி’’ பட்டமும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. முதல் 20 இடங்களைப் பெறக்கூடிய மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்கிறோம். வாழ்வின் கடினமான நேரங்களில் நாம் கற்ற கலைகளை மனதுக்கு மாமருந்து என்பதை உணர்ந்து, மாணவர்களின் கல்வித்திறன்களை, கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் கலைத் திருவிழாவை உருவாக்கியிருக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைவடிவங்கள் மற்றும் பண்பாடு பற்றிய பெருமிதத்தையும் மாணவர்களிடையே சேர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஆயத்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சை, உபகரணங்கள் வழங்கி, தக்க வகுப்புகளில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து முழுமையான கல்வி பெற ஆலோசனை வழங்கப்படுகிறது.அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும், உயர் தொழில் கல்வி ஆய்வகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Class Rooms) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கக்கூடிய நோக்கத்தோடு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டணமில்லா தொலைபேசிச் சேவை 14417 ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 11, 12-ஆம் வகுப்புகளில் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான மாதிரிப் பள்ளித் திட்டம் நடைபெற்று வருகிறது.


அரசுப் பள்ளி மாணவர்களிடையே பல்கோண திறன்களை வளர்க்கக்கூடிய நோக்கில், பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடுதல் சிறப்புமிக்க புதுமை முயற்சி சென்ற ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்து சிந்திக்கும் ஆர்வத்தை உருவாக்க, 13 ஆயிரத்து 210 அரசுப் பள்ளிகளில்  ‘வானவில் மன்றம்’ தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி ஏராளமான திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது.


ஒரு போட்டியில் கலந்து கொண்டோம்;  வெற்றி பெற்றோம்; பரிசு பெற்றோம் என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கெடுங்கள். படிப்பு முடிந்ததும் வேலைக்கு போய்விட்டோம், திருமணம் நடந்துவிட்டது, கை நிறைய சம்பாதிக்கிறோம் என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் இத்துடன் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும்.  உங்களது அறிவு கலை அறிவாக, கல்வி அறிவாக, பகுத்தறிவாக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். உங்களது அறிவு கலை அறிவாக, கல்வி அறிவாக, பகுத்தறிவாக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent