இந்த வலைப்பதிவில் தேடு

பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை - ஒருபார்வை

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

 



பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.


மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு படையல் வைத்து வழிபாடு செய்த பின்னர் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.


திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம்.


பொங்கலை சூரியனுக்கு படைத்து மகிழலாம்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனை செய்யலாம். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தை பெற்றுள்ளது.


தைப்பொங்கல்:- 


பொங்கல் என்பது தமிழக மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும். மழை காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் பிறகு வரும் அறுவடைக் காலம் இந்தத் தினத்தில் தான் தொடங்குகிறது. உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நாள் இது. உழவுத்தொழிலுக்கும், உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை மாதத்தின் முதல் நாள்.


உலகில் உயிர்கள் தோன்றுவதற்கும், உலக இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் சூரிய பகவான். பிரபஞ்ச சக்தி உண்மையா? என நாத்திகம் பேசுபவருக்கு நெத்தியடி கொடுக்கும் கண் கண்ட தெய்வம் சூரியன். நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது.


ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச் சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்யப்படும். புதுப் பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து பானையை சுற்றிக் கட்ட வேண்டும். பின்பு புது அரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு பால், நெய், முந்திரி, திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில் வைத்து அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைக்கலாம்.


குல, இஷ்ட தெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று மூன்று முறை கூவி சூரியனை வணங்குவது நல்லது. முழுக் கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்பு பூசணி துண்டு, கிழங்கு வகை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு தேங்காய், ஆகியவற்றையும் சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும். பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கும் முன்னோர்களை நினைத்து காகத்துக்கும் பொங்கல் வைத்தப் பிறகு அனைவரும் பொங்கல் சாப்பிடலாம்.


சூரிய வழிபாட்டை தைப் பொங்கல் அன்று மட்டுமல்ல, தினமும் வழிபடலாம். இயற்கை சக்தியான சூரியனிடம் இருந்து அதிகாலையில் வரும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்வடைந்து உற்சாகமடைந்து உடல் வலிமையும் பெறுகின்றன.ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். கண்களில் உள்ள குறைபாடுகள் சீராகும். அறிவுவளரும்.


பித்ருக்களாகிய முன்னோர்களின் நல்லாசி சூரிய ஒளி மூலமாக கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதில் சூரியன் இருப்பவர்கள், சூரியன் வலிமை குறைந்தவர்கள் , சூரியனுடன் சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றவர்கள் தினமும் ஆதித்ய இருதயம் படித்து சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறப்பு. தினமும் சூரிய பகவானை வழிபட்டு ஆதித்திய இருதயம் படித்து அல்லது கேட்டு வந்தால் சத்ரு பயம், கடன் தொல்லை, உஷ்ண நோய்கள் விலகும். படிப்படியாக கஷ்டங்கள் விலகும்.வியாபாரம், தொழில் விருத்தியாகி சகல காரியங்களும் சித்தியாகும். அனைத்து விதமான பாவங்களும் விலகி நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும். மனதில் உள்ள கவலைகள் ஒழியும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். அரசாங்க உதவி, அரசு வேலை, அரசியல் ஆதாயம் போன்றவற்றை சூரிய வழிபாட்டின் மூலமே பெற முடியும்.


நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக் கிறீர்களோ அதை அடைவதற்கு மந்திரம், யந்திரம், தந்திரம், இரவு வேலை என்று அழைய வேண்டிய அவசியம் இல்லை. சூரியன் உதயமாகும் போது ஆத்மார்த்தமாக ஆதித்ய இருதய சுலோகத்தை சொல்லி வந்தால் எல்லா தடைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் ஆத்ம பலம், ஞானம் போன்ற அனைத்தும் கிடைக்கும்.அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.


தமிழர் பண்டிகையான தைப் பொங்கலைக் கொண்டாடி இயற்கைக்கும் ,மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்த தை 1 அன்று பொங்கல் வைக்க நல்ல நேரம். அன்றைய தினம் சுக்ரனின் ஆதிக்கம், மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை என்பது சிறப்பு. காலை 6 மணி முதல் 9 மணி வரை சுக்ரன், புதன், சந்திர ஹோரைகள் இருக்கிறது. அன்றைய நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இருப்பதால், காலை 6 மணி முதல் 10.30 மணி வரை சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து படைத்து பூஜை செய்ய உகந்த நேரமாகும். மேலும் சூரியன் மகர ராசிக்குள் மதியம் 2.29 மணிக்கு பிரவேசிப்பதால் மாலை 4.30 முதல் 5.30 மணி வரையும் பொங்கல் வைக்கலாம். ராகு- காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை எமகண்டம்- மதியம் 3 முதல் 4,30 மணி வரை. ராகு மற்றும் எமகண்ட நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.


பொங்கல் திருநாளான தை மாதம் 1 2 3 ஆகிய நாட்கள் கரிநாளாக வருகிறது . எனவே அன்றைய தினங்களில் சுபநிகழ்ச்சிகளான திருமணம் , திருமணத்திற்கு தாலி செய்தல் . கடை திறப்புவிழா, அலுவலகம் , தொழிற்சாலை, கடைகள் திறப்புவிழா, காதுகுத்து, சீமந்தம், கிரக பிரவேசம் உட்பட அனைத்து சுபநிகழ்ச்சிகளை யும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அன்று சூரியவழிபாடு, சூரியபூஜை , பித்ருக்கள், குலதெய்வ வழிபாடுகள் செய்வது நல்லது.


மாட்டுப் பொங்கல்:- ஜனவரி 15 (தை 2). கடும் உழைப்புக்கும் உழவுக்கும் துணை செய்த கால்நடைகளை ஆராதிக்கும் நாள். உழவுக்கு உதவிய கால் நடைகளுக்கும் பால் தரும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் தான் மாட்டுப்பொங்கல்.


தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது, ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும். பண மதிப்பு இல்லாத காலத்தில் ஒருவரிடம் உள்ள கால்நடைகளை கொண்டே பொருளாதார நிலையை மதிப்பிட்டார்கள். கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன. கோமாதா என்றழைக்கப்படும் பசு பிராணிகளில் மிகவும் புனிதமானது. சாதுவானது.


அதனால் நமது பாரம்பரியத்தில் கோமாதா வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பசுவை தொடுவது புனிதம். அதன் மூச்சுக்காற்று பட்ட இடத்தில் நோய் அண்டாது என்பதால் தான் நமது முன்னோர்கள் பசுவை தெய்வமாக வழிபட்டார்கள்.


கோ பூஜை செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு. பசுவை அதிகாலையில் பார்ப்பதும், வணங்குவதும் புண்ணியமாகும். எனவே தினமும் பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, உணவாக கொடுக்க வேண்டும். தனித்த பசுவை வழிபடுவதுடன் கன்றுடன் சேர்ந்த பசுவை பூஜிக்க வேண்டும்


கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி வீட்டில் நித்தியவாசம் புரிவாள்.


அன்று காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் குரு ஒரையில் அல்லது 10.30 மணி முதல் 12 மணிக்குள் சுக்ரன், புதன் ஓரையில் கால்நடைகளை சுத்தப்படுத்தி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி மாலைகள் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். மாட்டுக் கொட்டகைகளை சுத்தம் செய்து சர்க்கரை பொங்கல் படைத்து கோ பூஜை செய்வது சிறப்பு .மாடுகளை நமஸ்காரம் செய்து விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுக்க வேண்டும்.


அன்று மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் சுக்ரன், புதன் ஒரையில் மங்கள வாத்தியங்களுடன் தெருவலம் அழைத்துச் சென்று கவுரவிக்கலாம். தை 2ம்தேதி மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதுடன் வீட்டு சாமி , இறந்தவர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்யலாம் .


காணும் பொங்கல்:- ஜனவரி 16 (தை 3). போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத காலத்தில் மனதை உற்சாகப்படுத்தும் சுற்றுலா தலங்களுக்கு எளிதில் சென்று வர முடியாது. அதனால் முற்காலத்தில் காணும் பொங்கல் அன்று உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஊரின் அருகில் இருக்கும் கடற்கரை, ஆற்றங்கரை போன்ற இடங்களுக்கு சென்று அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.


கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், மரம் ஏறுதல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும். இந்த நாளில் ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டால் ஊர் மக்களுக்கு எளிதில் எந்த கொடிய நோயோ, இயற்கை சீற்றங்கள் பாதிப்போ ஏற்படாது.


கால சூழல் மாற்றத்தால் பல ஊர்களில் எல்லை மற்றும் காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது. காவல் தெய்வத்திற்குரிய பூஜை வழிபாடு முறையாக இருந்தால் மட்டுமே ஊர் மக்களுக்கு ஆரோக்கியம், பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி போன்ற பல காரணிகள் சிறப்பாக இருக்கும். கொடூர நோய் தாக்கத்தால் உலக இயக்கங்கள் ஸ்தம்பிக்காது.


இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம். அன்று திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளலாம். காணும் பொங்கல் அன்று வயது முதிர்ந்த பெரியோர்களை நேரில் கண்டு ஆசி பெறுவது சிறப்பு. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற, வசதி குறைந்த வயோதிகர்களுக்கு அல்லது ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால் ஸ்ரீ சனி பகவான் மற்றும் பித்ருக்கள் நல்லாசிகள் கிடைக்கும். அன்று இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு போன்றவைகள் செய்யலாம். கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அரசின் சட்ட திட்டங்களை மதித்து பாதுகாப்பாக பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent