கல்லுாரி உதவி பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக வெளியான அறிவிப்பு, அசலா, போலியா என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அங்கமாக, ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது.
இதன் வாயிலாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, 4,136 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்.,15ல், துவங்கும் என்ற அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பரவியது. இந்த அறிவிப்பு போலி என, பள்ளிக் கல்வித் துறை சார்பில் மறுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அந்த அறிவிப்பில், பாட வாரியாக, எந்த கல்லுாரியில், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன; சம்பளம், இட ஒதுக்கீடு முறையை எப்படி பின்பற்றுவது; நேர்முக தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களுடன், அசல் போலவே இருந்தது.
இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், முன்கூட்டியே, 'லீக்' செய்யப்பட்டு இருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது.
இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் களமிறங்கி உள்ளனர்.
கைதேர்ந்த நபர்களால் தான், இப்படி அசல் போல ஆவணங்களை தயார் செய்ய முடியும். இதன் பின்னணியில் முக்கிய புள்ளிகள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக