இந்த வலைப்பதிவில் தேடு

எதைச் சாப்பிட்டால் தேர்வில் ஜெயிக்கலாம்?

சனி, 11 மார்ச், 2023

 





இப்போது எங்குப் பார்த்தாலும் தேர்தல் ஜுரத்தைத் தோற்கடிக்கிற தேர்வு ஜுரம்தான். மாணவர்கள் தேர்வுக்கு எப்படி அட்டவணை போட்டுப் படிக்க வேண்டுமோ, அதேபோலத்தான் உணவுப்பழக்கமும் இருக்க வேண்டும். தேர்வு நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதும் தவறு, சாப்பிடாமல் இருப்பதும் தவறு. உணவுப்பழக்கம் உடல்நிலையைப் பாதிக்கக்கூடும் என்பதால் உணவில் இரட்டிப்பு கவனம் தேவை.


குழந்தைகளுக்கு எதை, எப்படி, எப்போது சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்று பெற்றோருக்கு முதலில் தெளிவு வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எந்தப் பயமும் பதற்றமும் இன்றி தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.


பதற்றம் வேண்டாம்



பொதுவாகவே தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்குப் பதற்றம் இருக்கும். அதனால் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். படிக்க வேண்டுமே என்று சரியாகத் தூங்கவும் மாட்டார்கள். போதிய உணவும் தூக்கமும் இல்லாமல், தேர்வு அறையில் அவதிப்படுவார்கள். அப்படியில்லாமல் சுவையாகச் சாப்பிட்டு, சரியாகத் தூங்கினால் தேர்வில் சுலபமாக மதிப்பெண்கள் பெறமுடியும்.


வழக்கமாகப் படிப்பதைவிட தேர்வு நேரங்களில் மாணவர்கள் அதிக நேரம் படிப்பார்கள். இரவில் நீண்ட நேரம் விழித்து இருப்பார்கள். ஆனால், இப்படித் தூக்கம் இல்லாமல் அதிக நேரம் படிப்பது நல்லதல்ல. போதுமான தூக்கம் இல்லையெனில் சிலருக்கு அதிகமாகப் பசி எடுக்கும். சிலருக்குப் பசியே எடுக்காது. அதனால் கூடியவரை சரிவிகித உணவுப் பழக்கத்தைக் கடைபிடிப்பது நல்லது.


புரதம் நல்லது


படிக்கும் குழந்தைகளுக்குச் சத்து வேண்டுமே என்பதற்காக மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுத்தால், தூக்கம் அதிகமாக வரும். அதனால் மாவுச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் தரலாம். கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும் உணவுகளைக் கொடுப்பதும் நல்லது.



அசைவ உணவுகளில் புரதச் சத்து இருக்கிறது. அதிலும் கொழுப்பு குறைந்த முட்டை, மீன் போன்ற உணவுகளில் புரதம் அதிகமாக இருக்கிறது. அவை உடலுக்குச் சக்தியைக் கொடுத்து உற்சாகத்தை அதிகரிக்கும். காய்கறி சூப் செய்து கொடுக்கலாம். சூப், பசியைத் தூண்டுவதோடு சுறுசுறுப்பையும் தரும்.


சரியான இடைவெளிகளில்தான் சாப்பிட வேண்டும். நினைத்த நேரத்தில் எல்லாம் சாப்பிடுவது, அல்லது சாப்பிடாமலேயே பட்டினி கிடப்பது இவை இரண்டுமே உடல் உபாதையைத்தான் ஏற்படுத்தும்.


பொதுவாகவே எண்ணெய் உணவுகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அதுவும் தேர்வு நேரத்தில் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. பஜ்ஜி, போண்டா, சமோசா, பப்ஸ் போன்றவற்றில் அதிகமான எண்ணெய் இருப்பதால், உடலை மந்தப்படுத்தி, தூக்கத்தை வரவழைத்துவிடும். அதனால் எண்ணெய் குறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


வேக வைத்த உணவு வகைகள், நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளைக் கொடுப்பது நல்லது. கோதுமை மாவில் சப்பாத்தி செய்யும்போது, மாவைச் சலிக்காமல் அப்படியே செய்தால் நார்ச்சத்து முழுவதுமாகக் கிடைக்கும். தினமும் ஏதாவது ஒரு பழச் சாற்றைக் கொடுக்கலாம். முடியாதவர்கள் கேரட், பீட்ரூட் எனக் காய்கறி சாறெடுத்துக் கொடுக்கலாம். எலுமிச்சம் பழச்சாறும் பருகலாம்.



3 வேளை உணவு


காலையில் முட்டை, இட்லி அல்லது தோசை சாப்பிடலாம். மதியம் காய்கறி சாலட் அல்லது பழக் கலவை சாப்பிடலாம். பழங்களில் குளூக்கோஸ் அதிகம் கிடைக்கும். உடலை எப்போதும் புத்துணர்வுடன் வைத்திருக்கக் குளூக்கோஸ் உதவும். அதேபோல வைட்டமின்கள், மினரல்கள் இருக்கிற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம்.


வளரும் பிள்ளைகள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதற்குக் கேழ்வரகு கூழ் செய்து கொடுக்கலாம். இரவில் பால், பேரீச்சம்பழம் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் நிறைய இரும்புச் சத்து கிடைக்கும். அதேபோலப் பப்பாளி, மாதுளையில் வைட்டமின் டி சத்து நிறைய இருக்கிறது.


நிறைய பிள்ளைகள் எந்நேரமும் படிப்பு படிப்பு என வீட்டுக்குள்ளேயே அடைந்து இருப்பார்கள். இப்படி வீட்டுக்குள்ளேயே இருப்பதால் இயற்கையாகக் காலை இளம் வெயிலில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி அவர்களுக்குக் கிடைக்காமலேயே போய்விடுகிறது. அதனால் காலை வெயில் உடலில் படுவதுபோலச் சிறிதுநேரம் வெளியே காலாற நடக்கலாம். இது மனஅமைதியையும் தரும்.


காலையில் இளநீர் பருகுவதால் பொட்டாசியச் சத்து கிடைக்கும். பொட்டாசியம், மூளையைப் புத்துணர்வோடு வைத்திருக்கும்.



ஞாபகசக்தி அதிகரிக்க


நினைவாற்றலுக்கு உதவும் காய்கறிகளை அதிகம் கொடுக்கலாம். இவற்றைத் தேர்வு நேரத்தில் மட்டும் அதிகம் கொடுத்தால், நினைவாற்றல் பெருகிவிடும் என்று பலரும் நம்புகிறார்கள். குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்தக் காய்கறிகளைக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும். சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால், சில குழந்தைகளுக்கு அந்தக் காயே பிடிக்காமல் போகலாம்.


வல்லாரைக் கீரை, வெண்டைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் நினைவாற்றல் ஊட்டக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருக்கின்றன.


எப்போதும் படித்துக் கொண்டிருக்காமல் இடையிடையே ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன சின்ன வேலைக்குக்கூடப் பெற்றோரையே எதிர்பார்க்காமல் அடுப்படி பக்கம் போய், மாணவர்களே பாலைச் சூடுபடுத்தி அருந்தலாம். பழங்கள் நறுக்கிச் சாப்பிடலாம். இதனால் மூளைக்குச் சற்று ஓய்வு கிடைக்கும், உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent