கல்வி உதவித் தொகை பெறும் தருமபுரி மாவட்ட பள்ளி மாணவர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-23-ம் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதி திராவிடர் மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகையை தொடர்ந்து பெற மாணவ, மாணவியர் தங்களின் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.
மேலும், வங்கிக் கணக்கு பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். புதிதாக கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு எண் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
முகாம்களில் மாணவர்கள் ஆதார் எண்ணையும், ஓடிபி பெற தொலைபேசி எண்ணையும் அளித்து அஞ்சல் துறை வங்கிக் கணக்கு தொடங்கி பயனடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக