கூடலூர் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர் பிறந்த நாளிபோது இனிப்பு வழங்குவதை விட புத்தகம் வழங்கி வருகிறார்கள்.கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது பிறந்தநாள் பரிசாக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் நடைமுறை இந்த கல்வி ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே பள்ளியில் உள்ள நூலகத்தில் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் புத்தகங்கள் மட்டுமின்றி தினசரி செய்தித்தாள்களை வாசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வகுப்பு வாரியாக வாரத்தில் ஒரு நாள் 45 நிமிடம் நூலகத்தில் மாணவர்கள் தங்கள் நேரத்தை செலவிடவும் ஒதுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் பிறந்தநாள் பரிசாக புத்தகங்கள் வழங்கும் நடைமுறை மூலம் இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட புதிய நூல்கள் நூலகத்திற்கு கிடைத்துள்ளன. பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்கள் இதர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வாங்கி கொடுப்பதை தவிர்த்து அந்த செலவில் நூலகத்திற்கு நூல்களை வாங்கி கொடுக்கும் பழக்கம் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பொது நூலகங்களை போல் மாணவர்கள் நூல்களை வாங்கிச் சென்று வீடுகளில் வைத்து படித்துவிட்டு மீண்டும் நூலகத்தில் சேர்க்கும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.
பிறந்தநாள் கொண்டாடும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைகிறது. அத்துடன் நூலகத்திற்கு தரமான புதிய நூல்களும் விலையின்றி கிடைக்கிறது.
மாணவ-மாணவிகளுக்கு நூல்களின் முக்கியத்துவம், நல்ல நூல்களை வாசிப்பதால் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளவும், வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும், பள்ளி நூலகத்தை மேம்படுத்தவும் இது போன்ற நடவடிக்கைகள் பலன் தருவதாக அமைந்துள்ளதாக தலைமை ஆசிரியர் அய்யப்பன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக