இந்த வலைப்பதிவில் தேடு

8 இயக்குநர்களுக்கு பணியிட மாறுதல் - மீண்டும் இயக்குநர் நியமிக்க வாய்ப்பு: அதிகாரிகள் தகவல்!!

ஞாயிறு, 28 மே, 2023

 



பள்ளிக்கல்வித்துறையில் 8 இயக்குநர்களுக்கு பணியிடமாறுதல் வழங்கப்படவுள்ளது. இதையடுத்து ஆணையர் பதவியே ரத்தாகும் நிலையில், மீண்டும் பள்ளிக்கல்விக்கு இயக்குநர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். அவர் அமைச்சராக இருந்தபோது தான் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு குளறுபடிகள் உருவானது. குறிப்பாக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்ட அம்சங்கள் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் நுழைய தொடங்கியது.


அதன்படி பள்ளிக் கல்வித்துறைக்கு ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அந்த பதவி உருவாக்கப்பட்ட பிறகு ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தக்குமார் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு குளறுபடிகள் பள்ளிக் கல்வித் துறையில் உருவானது. அதாவது காலையில் ஒரு உத்தரவு வரும், அது குறித்து யாராவது கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் மாலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு மறுஉத்தரவு வரும். இதையடுத்து ஆணையர் பதவியை ரத்து செய்வது என அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த வாரம் ஆணையர் பதவியில் இருந்து நந்தக்குமார் வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.


இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள துறைகளில் 10 இயக்குநர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் 8 இயக்குநர்கள் பணியிடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அதன்படி பள்ளிக் கல்வித் துறையில் ஆணையருக்கு பதிலாக இயக்குநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் போது ஆணையர் பதவி ரத்தாவது உறுதியாகிவிடும். தற்போது பணியிட மாறுதலுக்கான கோரிக்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், விரைவில் இதற்கான உத்தரவு வெளியாகும் என்று தகவல்கள் கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent