தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த 26 நாட்களாக சுட்டெரித்த வெயில் இனி வரும் காலங்களில் படிப்படியாக குறையும். இந்த ஆண்டில் கத்திரி வெயில் தொடங்கிய பிறகு படிப்படியாக வெயில் அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் காணப்பட்டது.
இதற்கு பிறகு வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், என்றும் இல்லாத அளவுக்கு உச்ச அளவாக சென்னையில் 115 டிகிரிவரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அதிகபட்ச வெயில் அளவு 115 டிகிரியுடன் இந்த கத்திரி வெயில் முடிவுக்கு வர உள்ளது. இருப்பினும் நேற்று வரை வெயிலின் தாக்கம் சராசரியாக 100 முதல் 108 டிகிரி வரை இருந்தது.
சில இடங்களில் மட்டும் 106 டிகிரி, என்ற அளவில் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தது. கடந்த காலங்களில் கத்திரி வெயில் காலத்தில் அதிகபட்சம் 113 டிகிரி வரை தான் வெயில் உச்சம் பெறும். ஆனால் இந்த ஆண்டு அந்த அளவையும் மீறி வெயில் கொளுத்தியது வரலாறு காணாத ஒரு அளவு.
இந்நிலையில், தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கினால் கேரளாவில் மழை பெய்யும். அப்போது தமிழ் நாட்டின் சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு ஏற்படும். மேலும் தமிழ்நாட்டில் வெப்பத்தின் அளவும் குறையும். ஆனால், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரம் தள்ளிப் போகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், ஜூன் மாதமும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக