தமிழகத்தில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்து துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது.
இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்ேதர்வுகள் அடுத்த மாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இவ்வார இறுதியில் வெளியாகிறது. இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கும் துணைத்தேர்வுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இதனிடையே நடப்பாண்டு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரையும் கட்டாயம் துணைத்தேர்வு எழுத வைப்பதுடன், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இளம்பகவத் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2022-23 கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்விற்கு வருகை புரியாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களும் துணைத் தேர்வு எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.
இதற்காக தங்கள் பள்ளியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பொதுத் தேர்விற்கு பதிவு செய்தவர்களில், வருகை புரியாதவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களின் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
இம்மாணவர்களை கண்டறிந்து துணைத்தேர்வினை தன்னம்பிக்கையுடன் சந்திக்க, தக்க ஆலோசனைகளை வழங்கி, ஊக்கமூட்டி பள்ளிக்கு அழைத்து வர வேண்டும். துணைத்தேர்விற்கு உரிய காலகெடுவிற்குள் விண்ணப்பிக்கவும், சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்க்கவும், தேவையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் உதவியோடு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் துணைத்தேர்வுக்கான விழிப்புணர்வையும், தக்க ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். 12ம் வகுப்பிற்கான துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி மற்றும் 11ம் வகுப்பிற்கான துணைத்தேர்வு ஜூன் 27ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 10ம் வகுப்பிற்கான துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்படவுள்ளது. தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் துணைத்தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை திட்டமிட்டு, உரிய கால அட்டவணை தயாரித்து சிறப்புடன் செயல்படுத்த வேண்டும்.
துணைத்தேர்வு குறித்த மாணவர்கள், பெற்றோர்களின் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள 14417 என்ற இலவச உதவி மைய எண்ணை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அனைத்து செயல்பாடுகளை கண்காணிக்கவும், அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை உறுதி செய்யவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக